- பொது

டிசம்பர் 26ல் சென்னையில் கோலாகலமாக துவங்கும் ‘மார்கழியில் மக்களிசை’!

மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது!

இயக்குனர் பா.இரஞ்சித் தின்
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சியான ‘மார்கழியில் மக்களிசை’ ஆறாவது ஆண்டாக இம்முறை வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

‘மார்கழியில் மக்களிசை’ தமிழ்நாட்டில் இதுவரை நான்கு மாவட்டங்கள், மூன்று மாநிலங்கள் என 12 அரங்குகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் அரங்கேறியிருக்கிறது.

நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி, பழங்குடி இசை, ராப், ஹிப் ஹாப் என ஆறு இசை வகைமையின் கீழ் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். மூவாயிரத்திற்கு அதிகமான தனியிசைக் கலைஞர்கள் இசைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 35 இசைக்குழுக்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 8 இசைக்குழுக்களையும் சேர்த்து இதுவரை 43 இசைக்குழுக்கள் பங்கெடுத்திருக்கிறது.

நீலம் பண்பாட்டு மையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வை ஒருங்கிணைத்துவருகிறது. இம்மண்ணில் கொண்டாடத் தவறிய இசையை மேடையேற்றுவதோடு மூத்த இசைக்கலைஞர்களின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘மக்களிசை மாமணி’ என்கிற விருதையும் வழங்கிவருகிறது. இதுவரை 19 மக்களிசைக் கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டிற்கான ‘மக்களிசை மாமணி’ விருதைப் பெற இருக்கும் மூத்த கலைஞர்கள்:

1. தருமாம்மாள் (ராஜா ராணி ஆட்டக்கலை கலைஞர், ஒப்பாரி பாடகர்)

1970களில் மதுரை வட்டாரங்களில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளில், குறிப்பாக ராஜா ராணி ஆட்டக்கலையில் ஆண்களே பெண் வேடம் ஏற்று நடிப்பர். பிறகுதான் பெண்களும் இக்கலைக்குள் வரத் தொடங்கினர். இச்சூழலில் திருநங்கைகள் பல்வேறு அகப், புறப் போராட்டங்களுக்குப் பிறகு  நாட்டுப்புறக் கலைகளுக்குள் வரத் தொடங்கினர். மேலும், தனியாகக் குழுவையும் அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினர். இந்த வரலாற்றின் தொடக்க கால கலைஞர் தருமாம்மாள். ஒப்பாரி, தாலாட்டு, விபத்துப் பாட்டு, மர்மக் கொலைகள் பாட்டு, பிரச்சாரப் பாடல்கள் என 35 ஆண்டுகளுக்கு மேல் மக்களிசைக்குப் பெரும் பங்களிப்பை அளித்தவர்.

2. S.மூர்த்தி (நாதஸ்வரக் கலைஞர்)

பல தலைமுறைகளாக நாதஸ்வரம் – தவில் வாசிக்கும் குடும்பப் பின்புலம் கொண்டவர். 19 வயதில் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கியவர். இசைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தமையால் தன் சுற்றுவட்டார பகுதியில் பல இசைக்கலைஞர்களை உருவாக்கியவர். அந்தமான், புதுதில்லி மற்றும் புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களித்துவந்தவர். பொருளாதார நெருக்கடிகள் பல வந்தபோதிலும், தான் நம்பிய இசையை இன்றுவரை கைவிடாமல் இசை உலகத்திற்குத் தமது பங்களிப்பைச் செலுத்திவருவதோடு, பல கலைஞர்களை உருவாக்கிய ஆசானாகவும் திகழ்கிறவர்.

இவ்விரு இசைக் கலைஞர்களுக்கும் ‘மக்களிசை மாமணி’ விருதை அளிப்பதில் நீலம் பண்பாட்டு மையம் பெருமை கொள்கிறது.

எதிர்வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் ‘மார்கழி மக்களிசை’ நிகழ்ச்சியில், 550 தனியிசைக் கலைஞர்கள், 20 இசைக்குழுக்கள், 6 மொழியைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள். அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் என இத்தகைய முன்னெடுப்புகளில் ஆர்வமாய் கலந்துகொள்ளும் பல ஆளுமைகளும் பங்குபெற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.

🗓️ Date: 26, 27 & 28, டிசம்பர் 2025.

பச்சையப்பன் கல்லூரி மைதானம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan