
பழமைவாய்ந்த கல்வாய் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் படுகளம் தீ மிதித் திருவிழா!
செங்கல்பட்டு:ஜூன்.4th 2023- செங்கல்பட்டை அடுத்துள்ள கல்வாய் கிராமத்தில் மிக பழமைவாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்வாயில் அமைந்துள்ளது ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த மகோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு அக்னி வசந்த மகோற்சவம் மே24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இக்கோயிலில் தீ மிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினசரி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மகாபாரத இலக்கிய சொற்பொழிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மூலவர் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு உற்சவர் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதமிருந்த ஆண், பெண், பக்தர்கள் மாலை 6 மணிக்கு பூங்கரகத்தை தலையில் சுமந்தவாறு கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் தீ மிதித்து திரௌபதி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையும், 8 மணிக்கு திரௌபதி அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றன. விழாவையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.






