
“கூத்தாடி” என்ற சொல்லாடலுக்கு எதிரான கண்டன அறிக்கை
வணக்கம்,
சமீபகாலமாக அரசியல் பிரச்சார மேடைகளிலும், நேர்காணல்களிலும்,
திரைத்துறையைச் சார்ந்தவர்களை விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு
, “கூத்தாடி” என்ற சொல்லை மிகவும் இழிவான ஒரு சொல்லாகப்
பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒருவரைத் தாழ்த்திப்
பேச வேண்டும் என்பதற்காக, ஒரு கலை சமூகத்தின் அடையாளத்தையே
கேலிப் பொருளாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கூத்து என்பது தமிழர்களின் மிகத்தொன்மையான கலை வடிவம்.
இக்கலையை நம்பி இன்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து
வருகின்றன. “கூத்தாடி” என்ற வார்த்தையை திட்டுவதற்காகப்
பயன்படுத்துவது, அவர்களின் உழைப்பையும் கலையையும் சிறுமைப்
படுத்துவதாகும்.
தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியாத. நிலையில்
வாழும் விவசாயிகளை போல, நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த
இன்றையச் சூழலில், நலிந்து வரும் நமது பாரம்பரியக் கலைகளைக்
காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் கலைஞர்கள் பலர்,
வறுமையிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரமும்,
கௌரவமும் கிடைக்க வேண்டிய நேரத்தில்,அவர்களின் அடையாளத்தையே
ஒரு வசவுச் சொல்லாகப் பயன்படுத்துவது அவர்களின் மனதை
புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் கலையையே
சிறுமைப்படுத்துவதாக அமைகிறது .
எமது கோரிக்கை:
“கூத்தாடி” என்பது ஒரு இழிச்சொல்லல்ல; அது ஒரு பெருமைக்குரிய
அடையாளம். பசி நோக்கா நோன்பிருந்து, இரவு முழுவதும் கண் விழித்து
மக்களுக்காக ஆடிக்காட்டும் கலைஞர்களின் கண்ணியம் காக்கப்பட
வேண்டும். இனிவரும் காலங்களில், பொதுவெளியில் பேசுபவர்கள்
தங்களின் சொல்லாடல்களில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்
என கிராமிய கலைஞர்களின் சார்பாக தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சங்ககிரி ராச்குமார்
திரைப்பட இயக்குனர் & கூத்தாடி
14-04-26




