- சினிமா செய்திகள்

செவன் ஸ்டார் பாய்ஸ் _ விமர்சனம்

செவன் ஸ்டார் பாய்ஸ் விமர்சனம்

கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான ஒரு மாறுபட்ட திரைப்படம் செவன் ஸ்டார் பாய்ஸ்.

கிராமம் ஒன்றில் விளையாட்டுத்தனமாக திரியும் சிறுவர்கள் ஏழு பேருக்கு கால்பந்து விளையாட்டில் அளவு கடந்த ஆர்வம்.

அந்த சிறுவர்களில் ஒருவனையே மற்ற ஆறு பேரும் கேப்டன் பொறுப்பில் அமர்த்துகிறார்கள்.

விளையாடுவதற்கு சரியான இடம் இல்லாத சூழலில், இலை தழைகளும் புதர்களும் மண்டி கிடக்கும் ஒரு இடத்தை அவர்களாகவே சுத்தப்படுத்தி விளையாட்டு மைதானம் ஆக முயற்சி செய்கின்றனர்.

இந்த சூழலில் கால்பந்து விளையாட்டில் சாதனை புரிந்த ஒருவர் இந்த சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் வருகிறார்.

முறையாக கால்பந்து விளையாட்டு பயிற்சி பெற்ற பிறகு 14 வயது கீழ் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போட்டியில் இந்த சிறுவர்களுக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதில் அவர்கள் வென்றார்களா இல்லையா என்பதுதான் விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் செவன் ஸ்டார் பாய்ஸ் படத்தின் கதை.

கதையின் நாயகனாக வரும் சிறுவன் தனிஷ் வயதில் குறைவாக இருந்தாலும் முதிர்ச்சியான நடிப்பால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார்.

பயிற்சியில் சேர்த்துக் கொள்ளாத போது பரிதாபமான முகத்துடன் அமர்ந்திருக்கும் தனிஷ், பின்னர் போட்டியில் இறங்கியதும் அதிரடி ஆட்டத்தை நடத்தி அட்டகாசம் செய்வது ரசிக்கத் தகுந்த காட்சி.

இவருக்கு ஈடு கொடுத்து மற்ற ஆறு சிறுவர்களும் விளையாடி இருப்பதுடன் ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான நடவடிக்கையில் நம்மை கவர்கிறார்கள்.

பிரதான பாத்திரங்களில் தோன்றும் ஆண்டனி வர்கீஸ் மற்றும் அவரது காதலியாக வரும் ஜுமானா அப்துல் ரகுமான் ஆகியோர் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளிப்பவராக, இந்திய முன்னாள் கால்பந்து சாம்பியன் ஐ எம் விஜயன் நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகளை வெகுவாக ரசிக்கலாம்.

ஒளிப்பதிவாளர் ஃபையஸ் சித்திக்கின் பணியும் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜய்யின் இசையும் படத்துடன் ஒன்ற வெகுவாக உதவுகின்றன.

வித்தியாசமான கதையுடன், விறுவிறுப்பான இயக்கத்தில் தரமானதொரு படத்தை கொடுத்திருப்பதற்காக இயக்குனர் நிகில் பிரேம் ராஜை தாராளமாக பாராட்டலாம்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan