- சினிமா செய்திகள்

நல்ல படம்: விமர்சனம்

நல்ல படம்: விமர்சனம்

குடிப்பழக்கத்தின் கொடூரங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்திருக்கும்’நல்ல படம்’ உண்மையிலேயே ஒரு நல்ல படம்தான்.

இந்தப் படைப்பை சி பிரபு ராம் இயக்கியுள்ளார். டாக்டர் ஏ ஹரிஷ் முதன்மை நாயகனாகவும், தனலட்சுமி நாயகியாகவும் களம் இறங்கியிருக்கிறார்கள்.

மதுவுக்கு அடிமையான ஒரு மனிதனின் பாதையைச் சுற்றியே கதைக்களம் சுழல்கிறது.

பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரியும் இந்த மோசமான பழக்கத்தைக் கடுமையாக எதிர்த்து நாயகனையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.

மற்றொரு புறம், காதலி அவனை எப்படியாவது திருத்திச் சரியான பாதைக்குக் கொண்டுவரப் போராடுகிறாள்.

இதற்கிடையே, மதுவை விரும்பும் சிலர் இணைந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, நாயகனையே அதற்குத் தலைவராகவும் பொறுப்பேற்க வைக்கிறார்கள்.

நிலைமை இப்படிச் செல்லும்போது, நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு அரசு திடீரெனத் தடை விதிக்கிறது. அவ்வளவுதான்…

அரசு மதுக்கடையை திறந்தால் எல்லோரும் குடித்துப் பழக ஆரம்பிக்கணுமா?

அதே அரசு மதுக்கடையை மூடினால் எல்லோரும் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டுமா ?

பழகிப்போன உடலுக்கு இனி மது கிடைக்காது என்ற சூழல் வரும்போது, அந்தப் பெரிய சவாலை குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாகிறது.

அதன்பின்னர் அவர்களின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களும், புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் திணறும்போதே உருவாகும் நகைச்சுவையான கலாட்டாவும்தான் இந்தத் திரைப்படத்தின் மையம்.

நாயகனாக வரும் டாக்டர் ஏ ஹரிஷ், கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பான நடிப்பால் அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே மதுவுக்கு அடிமையான இளைஞரைப் போலவே காட்சியளிக்கிறார்.

தாயிடமும் தங்கையிடமும் கோபப்படுவதும், காதலியிடம் அமைதியாவதும் என இன்றைய தலைமுறை இளைஞரை அப்படியே பிரதிபலிக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார்.

நாயகி தனலட்சுமியும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவ மாணவியான இவர், மதுபார் நடத்துபவரைக் காதலிப்பதும், அதிலேயே உறுதியாக நின்று அவரை மாற்ற முயல்வதும் சிறப்பு.

மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையும் ஒளிப்பதிவும் கதைக்குக் கூடுதலான பலத்தைச் சேர்க்கின்றன.

மதுப் பழக்கத்தால் தனிநபருக்கும், குடும்பத்திற்கும், இந்தச் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை இந்தப் படம் ஆழமாகப் பேசுகிறது. அதேநேரத்தில் நகைச்சுவை, காதல், பாசம், சமூக விழிப்புணர்வு என அனைத்தும் கலந்து அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறது.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan