- ஆரோக்யம்

உலர்ந்த கண் நிலைக்கு சிகிச்சையளிக்க உயர்தொழில்நுட்ப சாதன தொகுப்பினை அறிமுகம் செய்யும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

Dr. Kaladevi Sathish, Zonal Head – Clinical Services, Dr Agarwal’s Eye Hospitals, Porur ,Prof. Amar Agarwal, Chairman, Dr Agarwal’s Group of Eye Hospitals,  Dr Soundari, Head Medical Services, Dr. Agarwal’s Eye Hospital, Chennai and Dr. Ashar Agarwal, Head Clinical Services, Dr. Agarwal’s Group of Eye Hospitals

உலர்ந்த கண் பாதிப்பு அறிகுறியை கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் மிக நவீன தொழில்நுட்பத்தின் ஒரு விரிவான சாதன தொகுப்பை போரூரிலுள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது.  தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் போரூரில் அமைந்துள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் இப்புதிய சாதன தொகுப்பு வசதியினை இன்று தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் ஊரக தொழில்துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. P. பெஞ்சமின், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர், புரொஃபசர் அமர் அகர்வால்,  டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, போரூர்ன் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர். கலாதேவி சதீஷ் ஆகியோரும் இந்த சீர்மிகு தொடக்கவிழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

உலர்ந்த கண் என்பது, கண்ணில் ஏற்படுகின்ற ஒரு பாதிப்பு நிலையாகும்.  போதுமான அளவு தரமான கண்ணீர் கண்ணில் சுரந்து நீர்பதத்தை ஏற்படுத்தி கண்ணைப் பேணுவதற்கு இயலாத நிலையையே இது குறிக்கிறது.  கண்களில் இயல்பான அளவு கண்ணீர் சுரப்பதை தூண்டிவிடுவதற்கும், முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கும் மற்றும் அதனைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் தேவையான கண் பரிசோதனை, நோய்கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பிற்கான சாதனங்களின் தொகுப்பை டிரை ஐ சூட் என்ற இந்த வசதி கொண்டிருக்கிறது.

இத்தொடக்கவிழா நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார், கண் மருத்துவவியல் உட்பட, அனைத்து துறைகளுக்கும் தரம் மற்றும் சேவையை கருத்தில்கொண்டு இயங்குகின்ற பல உயர் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை கொண்டிருப்பதால் இந்நாட்டில் மருத்துவசேவையை நாடி மக்கள் திரளாக வருகின்ற அமைவிடமாக சென்னை மாநகரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.  உடல்நல பராமரிப்பு சேவைகளின் பயனளிப்பு நிலை, தரம் மற்றும் கட்டுபடியாகக்கூடிய எளிய அணுகுவசதி ஆகியவற்றை இன்னும் உயர்த்துவதற்கும், உயர்நிலை தொழில்நுட்பங்களும் மற்றும் தகுதியும், அனுபவமும் மிக்க மருத்துவ வல்லுனர்களின் நிபுணத்துவமும் முக்கியமானவை என்று தனது உரையில் அவர் கோடிட்டுக் காட்டினார்.

கண் மருத்துவவியலில் முன்னோடித்துவ நிபுணர் என்று உலகளவில் புகழ்பெற்றிருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர், புரொஃபசர் அமர் அகர்வால் பேசுகையில், “உலகளவில் 5 மில்லியன் நோயாளிகளுக்கு மருத்துவ சேவையை வழங்கியிருக்கும் நிலையில் எமது மருத்துவமனை 63வது ஆண்டில் கால் பதிக்கிறது.  இத்தருணத்தில் கண் பராமரிப்பை எளிதானதாகவும், சிறப்பானதாகவும் மற்றும் அதிக துல்லியமானதாகவும் ஆக்கவேண்டுமென்ற குறிக்கோளில் நாங்கள் தொடர்ந்து உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டிருக்கிறோம்.  தரமான கண்பராமரிப்பு சிகிச்சை மீது மிகச்சிறப்பான அக்கறையையும், முக்கியத்துவத்தையும் கொண்டிருப்பதோடு, புதிய சிகிச்சை உத்திகளை கண்டறிந்து, அவற்றை அறிமுகம் செய்வது என்பதையே இது பிரதானமாக உணர்த்துகிறது,” என்று கூறினார்.

 உலர்ந்த கண் பாதிப்புநிலை குறித்து பேசிய டாக்டர் அகர்வால், உலர்ந்த கண் பாதிப்பு நோய்க்குறி காணப்படும் விகிதாச்சாரம் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 5-லிருந்து, 15 சதவிகிதம் என்பதற்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.  உலர்ந்த கண் நிலையை ஒரு பொதுவான மற்றும் அநேக நேரங்களில் தீவிர பிரச்சனையாக ஆக்கியிருக்கும் சில முக்கிய காரணிகளுள், நவீன வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன.   கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் திரைகளையே நீண்டநேரம் மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதோடு, அவ்வப்போது கண்களை சிமிட்டாமல் இவ்வாறு இதே நிலையிலேயே இருப்பது உலர்ந்த கண் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

  செயற்கை விளக்குகளின் வெளிச்சத்தில் கண்கள் வெளிப்படுமாறு இருப்பது, நீண்டநேரம் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவது மற்றும் காற்றில் காணப்படும் மாசு ஆகியவையும் உலர்ந்த கண் பிரச்சனைக்கு சில காரணங்களாக இருக்கின்றன.  இவை மட்டுமல்லாது, வயது, பாலினம், பயன்படுத்திய சில மருந்துகள் மற்றும் உடல்நிலை பாதிப்புகள் ஆகியவையும் இந்த நிலை ஏற்படுவதற்கு பங்காற்றுகின்றன என்று கூறலாம்.

உலர்ந்த கண்கள் பிரச்சனையுள்ள நபர்கள், கண்ணில் அரிப்பு, கண்ணில் உறுத்தல் அல்லது எரிச்சல், அளவுக்கதிகமாக நீர்வடிதல் மற்றும் மங்கலான பார்வை போன்றவற்றை அனுபவிக்கக்கூடும்.  இதற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் விடப்படுமானால், உலர்ந்த கண்ணின் காரணமாக வெளிச்சத்தை பார்க்க இயலாத நிலை, மங்கலான பார்வை ஆகியவை ஏற்படக்கூடும் மற்றும் நிரந்தரமாகவே பார்வைத்திறனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.  டிரை ஐ சூட் என்ற இந்த வசதியானது, நோயாளிகளுக்கு விரிவான கண் பரிசோதனையை மேற்கொள்ளவும் மற்றும் உரிய சிகிச்சையளிக்கவும் சிறப்பாக உதவும்.

புகழ்பெற்றிருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, போரூர்ன் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர். கலாதேவி சதீஷ், உலர்ந்த கண்ணுக்கான இயந்திரத்தின் பயன்பாடு குறித்து பேசுகையில், “கண்ணீர் ஆவியாகுதல் மற்றும் நீர் வடிதல் என்பவை, உலர்ந்த கண் நோய்களின் இரு முக்கிய வகைகளாக இருக்கின்றன.  உலர்ந்து ஆவியாகுதல் என்பது, மிக அதிகமாக காணப்படுகிற வடிவமாகும்.  மற்றும் மீபோமியன் சுரப்பி செயலிழப்பு (MGD) என்பதோடு இது பொதுவாக தொடர்புடையதாக இருக்கிறது.  இந்த எம்ஜிடி நிலைக்கு நீண்டகால நிவாரணத்தை வழங்கக்கூடிய அதிக பயனளிக்கும் சிகிச்சையாக, தீவிர நெறிமுறைப்படுத்தப்பட்ட துடிப்புள்ள ஒளி (IRPL) என்பது இருக்கிறது.  மீபோமியன் சுரப்பிகளை சுரக்குமாறு தூண்டிவிடுவது மற்றும் அவைகளை சுருங்குமாறு செய்வதும் இந்த சிகிச்சையின் இலக்காகும்.  மீபோமியன் சுரப்பிகளில் திறப்பு துளைகளில் கெட்டியாகியிருக்கிற எண்ணெய் அடைப்புகளை உருக்கி, வலியேற்படுத்திக் கொடுப்பதும் இச்சிகிச்சையின் இலக்காகும்.

  டிரை ஐ சூட் என்ற இச்சாதனமானது, நோய் பாதிப்புநிலையை கண்டறிவதற்கும் மற்றும் ஐஆர்பிஎல் சிகிச்சைக்கும் ஆனது.  நோய் பாதிப்பை கண்டறிவதைப் பொறுத்தவரை கண்ணீரின் அளவு, தரம் மற்றும் கண்ணீரின் வடியும் போக்கு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்காக இத்தொகுப்பு பயன்படுத்தப்படும்.  போதுமான அளவு இல்லாத கண்ணீரின் காரணமாக கண்களின் வெளிமேற்பரப்பில் காணப்படும் மாற்றங்களை அடையாளம் காண்பதற்கும், கண் இமைகள், கருவிழி ஆகியவற்றின் கட்டமைப்பு மற்றும் நோயாளிகளின் கண்சிமிட்டும் செயல்முறைகள் புரிந்துகொள்வதற்கும் இச்சாதனம் பயன்படுத்தப்படும்.

கண்ணில் கீறலிட்டு செய்யப்படும் சிகிச்சையாக இது இல்லாத காரணத்தால், டிரை ஐ சூட்டைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் ஐஆர்பிஎல் சிகிச்சையினால் எந்தவொரு பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை.

Dr Soundari, Head Medical Services, Dr. Agarwal’s Eye Hospital,   Prof. Amar Agarwal, Chairman, Dr Agarwal’s Group of Eye Hospitals , Thiru D. Jayakumar, Minister for Fisheries and Personnel and Administrative Reforms, Government of Tamil Nadu, Thiru. P. Benjamin, Minister for Rural Industries, Government of Tamil Nadu and Dr. Kaladevi Sathish, Zonal Head – Clinical Services, Dr Agarwal’s Eye Hospitals

About expressuser

Read All Posts By expressuser