- ஆரோக்யம்

இளம் வயது மாரடைப்பை தடுப்பது எப்படி?

இளம் வயது மாரடைப்பை தடுப்பது எப்படி?

 போர்டிஸ் மலர் மருத்துவமனை இருதயவியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பிரதீப் நாயர் விளக்கம்

இந்தியாவில் இளம் வயது மாரடைப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயதில் மாரடைப்பு வராமல் தடுப்பது குறித்து போர்டிஸ் மலர் மருத்துவமனை இருதயவியல் துறை  மூத்த ஆலோசகர் டாக்டர் பிரதீப் நாயர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து டாக்டர் பிரதீப் நாயர் கூறுகையில்,கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் இருத நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் பெருமளவிலான உயிரிழப்பு இதன் காரணமாக ஏற்படுகிறது. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்பட்டு அது மரணத்திற்கு வழிவகுக்கிறது. முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் இந்த மாரடைப்பு நோய் தற்போது இளம் தலைமுறையினருக்கும் ஏற்படுகிறது. இளம் வயது இந்தியர்களை பாதிக்கும் புதிய தொற்றுநோயாக இது உருவெடுத்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இதய ரத்த குழாய் தொடர்பான நோய் பாதிப்பு என்பது மற்ற சமூகத்தைக் காட்டிலும் இந்தியர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதிக அளவில் பாதித்து வருகிறது. இந்த நோய், அமெரிக்கர்களை காட்டிலும்  3 முதல் 4 மடங்கும், சீனர்களை காட்டிலும் 6 மடங்கும், ஜப்பானியர்களைக் காட்டிலும் 20 மடங்கும் அதிகமாகவும் இந்தியர்களை பாதிக்கிறது. செல்வச் செழிப்பு, நவீனமயமாக்கல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவை இந்நோய் ஏற்பட முக்கிய காரணமாகின்றன. 2010 மற்றும் 2015-க்கு இடையே 40 வயதிற்குட்பட்டவர்களிடையே மாரடைப்பால் ஏற்படும் மரணம் என்பது கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்திருந்ததாக மேக்ரோ பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்த தேசிய ஆணையம் தெரிவித்திருந்தது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான மாரடைப்பு நோய் பாதிப்பு என்பது ஆண்களுக்கு மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது. தமனியின் முன்புறச்சுவர் பாதிப்பால் ஏற்படும் மாரடைப்பு என்பது பொதுவான ஒன்றாகும்.  பெரும்பாலான நோயாளிகளுக்கு இதயத்தில் உள்ள சிறு தமனிகள் சேதமடைந்த நிலை உள்ளது. மன அழுத்தம், குழந்தை பருவ அனுபவங்கள் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஆகியவை இதய ரத்த குழாய் தொடர்பான நோய் பாதிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்டர் ஹார்ட் ஆய்வில், பொதுமக்களில் இதய ரத்த குழாய் தொடர்பான நோய் ஏற்படுவதற்கு உளவியல் காரணிகள் 2.67 விகிதம் என கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகை காரணமாக 32.5 சதவீதம் இது அதிக ஆபத்தானதாகும். அதிக அளவு கெட்ட கொழுப்பு மற்றும் குறைந்த அளவு நல்ல கொழுப்பை கொண்ட உயர் ட்ரைகிளிசரைட்களின் முக்கோணம் இந்திய மரபணு முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொழுப்பு அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒரு புரதமான அபோலிபோபுரோட்டீன்-பி அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லிபோபுரோட்டீன் – ஏ, கெட்ட கொழுப்பைவிட தமனிகளில் கொழுப்புகள் உருவாவதை பத்து மடங்கு ஊக்குவிக்கும். இது துவக்க நிலை பெருந்தமனி தடிப்பு மற்றும் ரத்த உறைவுக்கு வழி வகுக்கிறது. லிபோபுரோட்டீன் – ஏ பாதிப்பு என்பது  இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியமான காரணியாகும். ட்ரைகிளிசரைடு அளவை மதிப்பிடுதல் என்பது, கெட்ட கொழுப்பின் அளவை மறைமுகமாக மதிப்பிடுவதாகும். குறைந்த அளவிலான நல்ல கொழுப்பு மற்றும் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட வகை உயர்நிலை கொழுப்பு ஆகியவை இணைந்து சிறிய அடர்த்தியான கெட்ட கொழுப்பை உருவாக்குகிறது. இது ரத்த குழாய் சம்பந்தமான நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை 3 மடங்குக்கு மேல் அதிகரிக்கிறது. இந்தியர்களிடையேயான பொதுவான வளர்சிதை மாற்ற நோய் தாக்கம் ரத்த குழாய் சம்பந்தமான நோய் பாதிப்புக்கு மற்றொரு முக்கிய காரணியாகும். ரத்த குழாய் சம்பந்தமான நோய் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு நோய்த்தொற்று, வைரஸ் மற்றும் பாக்ட்ரீயா ஆகியவற்றின் காரணமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இளம் இந்தியர்களிடையே, இதய ரத்த குழாய் தொடர்பான நோய் பாதிப்பை எதிர்த்து போராடுவதற்கும் மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்யாத நிலை, சீரற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களால் ஏற்படும் கடுமையான மாரடைப்பு போன்றவற்றை குறைப்பதற்கும், பொதுவான அறிகுறிகளை கண்டறிவது கட்டாயமாகும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன்,  ரத்தத்தில் அதிக கொழுப்பு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் இந்த நோய் குறித்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். ட்ரைகிளிசரைடுகள் என்னும் ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவற்றின் நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

முக்கிய மருத்துவமனைகளில், கொழுப்பில் உள்ள புரதச்சத்து, அபோலிபோபுரோட்டின்கள் என்னும் கொழுப்பை இணைக்கும் புரதங்கள், பைப்ரினோஜென், ஹோமோசிஸ்டீன், மற்றும் ஹைபரின்சுலினீமியா ஆகிய புதிய ஆபத்து நிறைந்த காரணிகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ரத்த நாள பாதிப்பு உடைய நபர்கள், 30 வயதிற்கு பிறகு மன அழுத்த இசிஜி, மன அழுத்த எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் இடையே தொற்று நோயாக வேகமாக பரவி வரும் கரோனரி பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுப்பதற்கு தேயைான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானதாகும். தொழில்மயமிக்க நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் மாரடைப்பால் ஏற்படும் மரணம் என்பது குறைந்து வருகிறது. 1965-1990க்கு இடையே ஜப்பான் மற்றும் பின்லாந்தில் 60 சதவீதமாகவும், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 50 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதும், இது தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளித்ததும் ஆகும். தொழில்மயமான நாடுகளின் இந்த சாதனை இந்தியாவில் உள்ள டாக்டர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு பாடமாகவும் உத்வேகமாகவும் அமைய வேண்டும்.

இளைஞர்களிடையே ஏற்படும் மாரடைப்பு தொடர்பான அறிகுறிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடுமையான நெஞ்சு வலி, அதிகப்படியான வியர்வை, குமட்டல், வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இளைஞர்கள் மாரடைப்பால் மரணம் அடைவதற்கு புகை பிடித்தலும் முக்கிய காரணியாக உள்ளது. இதுபோன்ற அறிகுறிகள் தோன்றிய ஒரு மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படுகிறது. அதிக அளவிலான இருதய தசை சேதம் அடைதல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சீரற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றின் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிரெட்மில் பரிசோதனை உள்ளிட்ட முழு இருதய பரிசோதனை செய்து கொள்ளுதல், வாரத்தில் குறைந்தபட்சம் 5 நாட்கள் 3 கிலோ மீட்டர் முதல் 4 கிலோ மீட்டர் வரை நடை பயிற்சி மேற்கொள்ளுதல், பல்வேறு விதமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், மீன், குறைந்த கொழுப்பு கொண்ட மாமிச உணவுகள், கீரை வகைகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். புகைபிடித்தலை தவிர்த்தல், மன அழுத்தத்தை குறைப்பதற்கான யோகா, தியானம் ஆகியவற்றை செய்வதன் மூலம் 30 வயதை கடந்தவர்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என்று டாக்டர் பிரதீப் நாயர் தெரிவித்துள்ளார்.

 

 

About expressuser

Read All Posts By expressuser