விழித்தெழு திரைப்படத்தின் படக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இப்படத்தை ஆதவன் சினி கிரியேஷன் சார்பில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளரும் பத்திரிகையாளரும் சிவகங்கை நகர மன்றத் தலைவருமான சி.எம்.துரை ஆனந்த், ‘விழித்தெழு’ படத்தின் இயக்குநர் தமிழ்ச்செல்வன், படத்தின் கதாநாயகன் அசோக், நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன், நடிகை ஆதியா,நடிகர்கள் ரஞ்சன், சரோஜ்குமார், காந்தராஜ், சேரன் ராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் தமிழ்ச்செல்வன் பேசும்போது,
” இந்த ஆன்லைன் மோசடி பற்றி மக்களுக்குப் புரியும் படியாகத் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லியிருக்கிறோம்.
படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது என் வாழ்க்கையில் இப்படி நடந்தது உன் வாழ்க்கையில் இப்படி நடந்தது என்று ஒவ்வொருவரும் பேசிக் கொள்வார்கள். ஏன் உங்களில் ஒருவர் கூட பேசிக் கொள்வார்” என்றார்.
படத்தின் கதாநாயகன் நடிகர் அசோக் பேசும்போது ,
“நம் அனைவரையும் இங்கே இணைத்துள்ளது நமது இயக்குநர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தான். இப்படம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது . இந்தப் படத்தில் கதை தான் கதாநாயகன். மற்ற அனைவரும் அதற்கு உதவி செய்பவர்களாக இருந்திருக்கிறோம். நடிகர்கள் உட்பட நாங்கள் எல்லாருமே அந்தக் கதைக்கு உதவி இருக்கிறோம் அவ்வளவுதான் .மார்ச் மூன்றாம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.இந்தப் படத்திற்கு ஆதரவு வந்து ஊடகங்கள் உதவ வேண்டும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஆதியா பேசும்போது,
“நான் இப்போது கன்னடம், மலையாளம், தமிழ் என்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வது என்னவென்றால்,நாம் இந்த சமுதாயத்தில் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நான் இரண்டு விதமான குணம் வெளிப்படும் படியான கேரக்டரில் நடித்துள்ளேன். ஒரு பக்கம் அப்பாவியாக இருப்பேன் என்றால் இன்னொரு பக்கம் இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் ஒரு மோசடிப் பெண்ணாக வருவேன். இப்படி இருமுகம் காட்டி இருக்கிறேன் . இதை அனைவரும் திரையரங்கில் வந்து பாருங்கள் வெற்றி பெற வையுங்கள்” என்றார்.
படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் பேசும்போது,
“இந்தப் படம் உருவாவதற்கு மூல காரணமே தயாரிப்பாளர் அவர்கள்தான். இந்தக் கதையைக் கேட்டு படமாக்க முன் வந்ததற்கு முதலில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இன்று சினிமா பல பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறது. படம் எடுப்பதை விட வெளியிடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. திரையரங்குகள் கிடைப்பதில்லை.இந்தச் சூழ்நிலையில் படம் தயாரிக்க முன் வந்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல வேண்டும்.இயக்குநர் தமிழ்ச்செல்வன் எங்கள் பகுதி மண்ணைச் சேர்ந்தவர். ஏற்கெனவே ‘காயம்’ என்று படம் எடுத்திருந்தார் .அதில் நான் நடித்து இருப்பேன்.அதைவிட இந்தப் படம் சிறப்பாக எடுத்திருக்கிறார்.இந்தப் படத்தில் கதைதான் முக்கியமான அம்சமாக இருக்கும். எனக்கும் இதில் நல்லதொரு பாத்திரம் கொடுத்துள்ளார். நான் நன்றாக நடிப்பேன் என்றாலும் எனது நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு வாய்ப்பை இந்த படத்தில் வழங்கி இருக்கிறார் இயக்குநர்.நான் நடித்துள்ள பகுதி நிச்சயமாக அனைவரையும் கண்கலங்க வைக்கும் .நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. கொரோனா காலகட்டத்தில் இரண்டு வருஷம் எதுவும் செய்யாமல் இருந்தோம். அப்போது சேலத்தில் இருந்த எங்கள் சொந்த இடத்தில் ஏதாவது விவசாயம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன்.ஒரு நாள் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தபோது,நானூறு சதுர அடி உங்களிடம் நிலம் இருந்தால் போதும் . அப்போது உங்கள் இடத்தில் செல்போன் டவர் வைப்பதற்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒரு விளம்பரம் வந்தது. நானும் தொடர்பு கொண்டேன். பிறகு அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள் .நானும் நல்ல விஷயம் தானே என்று அவர்களைத் தொடர்பு கொண்டேன்.சிலர் வந்து எங்கள் நிலத்தை எல்லாம் பார்த்தார்கள்.அப்போது அவர்கள் டெபாசிட் தொகையாக 5 லட்சம் தருகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள்.
பார்த்துவிட்டுச் சென்றவர்கள் பிறகு,நீங்கள் ஒரு 25 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று சொன்னபோது எனக்கு உள்ளுக்குள் இடித்தது. லட்சக்கணக்கில் டெபாசிட் கொடுக்கக்கூடியவர்கள் நம்மிடம் 25 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள் என்று .பிறகு எனது நண்பர்களிடம் எல்லாம் விசாரித்த போது, அது ஒரு மோசடி என்று தெரிந்தது. பிறகு அவர்களைப் பிடித்து விரட்டி அடித்தோம் .இப்படி என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.உங்களுக்குத் தெரிந்தவர் வாழ்க்கையில் எங்காவது நடந்திருக்கும்.அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் படிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் சி .எம் துரைஆனந்த் பேசும்போது,
“உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன்.நானும் ஒரு பத்திரிகையாளர்தான். ‘பருந்துப் பார்வை’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் நான்.
இந்த இயக்குநர் தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே எடுத்த ‘காயம்’ படத்தில் நான் நடித்திருக்கிறேன் .அடுத்து நல்லதொரு கதை சொன்னதால் நான் தயாரிப்பதாக முடிவு எடுத்திருந்தேன். அப்படி அவர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது .நானும் இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கும் வந்திருக்கின்றன.என் பெயரைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகள் செய்துள்ளது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.என் படத்தை முகநூலில் போட்டு நான் கோமா நிலையில் இருப்பதாகக் கூறி உதவி கேட்டு 5 கோடி ரூபாய் செலவாகும் என்று கேட்டு கிட்டத்தட்ட 90 ஆயிரம் ரூபாய் போல அனுப்பி இருக்கிறார்கள் அப்படிப்பட்ட மோசடி என் வாழ்க்கையில் நடந்துள்ளது.எனது படத்தை முகநூலில் பார்த்துவிட்டு ஒரு காவல்துறை அதிகாரி என் மகனிடம் கேட்டிருக்கிறார். அப்பா நன்றாகத்தான் இருக்கிறார், சென்னையில் தான் இருக்கிறார் என்று மகன் சொன்னபோது, இது பற்றிப் புகார் அளிக்கச் சொல்லி சைபர் கிரைம் காவல்துறை மூலம் தேடி அந்த மோசடிக்காரர்களைப் பிடித்துப் பார்த்த போது அவர்கள் அனைவரும் வட இந்தியர்கள் என்பது தெரிய வந்தது.எங்கள் ஊர் ஊரில் ஒரு விவசாயி விவசாயம் செய்த மகசூலில் கிடைத்த மொத்த பணத்தையும் திருமணத்திற்காக வைத்திருந்தார். இப்படிப்பட்ட மோசடியில் அவர் மொத்த பணத்தையும் இழந்தார்.இதுபோல் எனக்கு தெரிந்து மோசடியில் ஏமாந்து உயிர்விட்டவர்களும் உண்டு.இப்படிப்பட்ட கதையை இயக்குநர் சொன்னபோது அதைப் படமாக்குவது என்று முடிவெடுத்தேன். இதில் நடிப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் நடித்திருக்கும் கதாபாத்திரங்களுக்குரிய காட்சிகளில் கதாநாயகன் போலவே தெரிவார்கள். அண்ணன் சரவணன் நடித்திருந்த காட்சிகளை நான் திரையில் பார்த்தபோது எனக்கு கண் கலங்கி அழுகை வந்துவிட்டது.நான் இந்தப் படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன்.
ஒரு பத்திரிகையாளர் நினைத்தால் சமூகத்தில் எந்த விஷயத்தையும் கொண்டு சேர்க்க முடியும் .சமூகத்தில் புரட்சியையும் ஏற்படுத்த முடியும் என்ற விஷயத்தைச் சொல்லியிருக்கிறோம். இதை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று ஒரு பத்திரிகையாளராக நான் கேட்டுக்கொள்கிறேன்.படத்தின் வெற்றி உங்கள் கையில் தான் இருக்கிறது. நாங்கள் நடித்ததோடு எங்கள் வேலை முடிந்து விட்டது. இனிமேல் இது உங்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு படத்தை எடுப்பது பெரிதல்ல. அதைத் திரைக்கு கொண்டு வருவது தான் பெரிய விஷயம்.தமிழ் சினிமாவில் 1500 படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. சென்சாராகி, சென்சாராகாமல் உள்ள படங்கள் ஏராளம் இருக்கின்றன.பல சிரமங்களைக் கடந்து தான் இதை நாங்கள் திரையரங்கங்களுக்குக் கொண்டு வருகிறோம்.நாங்கள் இப்படத்தை 100 திரையரங்குகளுக்குக் குறையாமல் வெளியிடுகிறோம். அனைவரும் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கூடிய இந்த படத்தைப் பார்க்க வேண்டும்.
நான் வேறு மாதிரியாகக் காதல் படங்கள் எடுத்திருக்கலாம்.வேறு எந்த மாதிரியான படங்களும் எடுத்திருக்கலாம். ஆனால்,நான் ஒரு பத்திரிகையாளன் நினைத்தால் எப்படிப்பட்ட மாற்றத்தையும், ஏற்படுத்த முடியும் என்பதற்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். பேனா தான் இந்தப் படத்தின் கருவாக இருக்கிறது.
ஆன்லைன் மோசடிகள் பற்றி நீங்கள் படம் எடுக்கிறீர்கள்.அது உங்களுக்குத் தேவையில்லாதது .வேறு மாதிரியான படங்களில் வேண்டுமானால் நீங்கள் நடியுங்கள். இந்தப் படத்தை எடுக்காதீர்கள். கதையை மாற்றி விடுங்கள் என்று பலரும் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அப்போது நான் படப்பிடிப்புதொடங்கி 10நாட்கள் ஆகியிருக்கும். இருந்தாலும் எடுத்தவரை போகட்டும். இந்த படத்தை எடுக்க வேண்டாம் என்று பலரும் என்னை எச்சரித்தார்கள், மிரட்டினார்கள் ஆனால் நான் அதற்கு இணங்கவில்லை”என்றார்.
நீங்கள் சினிமாவில் இருந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகப் படம் எடுக்கிறீர்கள். ஆனால் சினிமாவில் இருக்கும் நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மிக்கு விளம்பரம் செய்கிறாரே? என்று கேட்டபோது,
“அது தவறுதான் கண்டிப்பாக அது தவறுதான்.இந்த மாதிரியான விஷயத்தைச் சினிமா நடிகர்கள் நடிகைகள் செய்து ஊக்குவிக்கக் கூடாது.இந்த மாதிரி நடிப்பவர்கள் மீது அரசோ ,சினிமா சம்பந்தப்பட்ட அமைப்போ நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்” என்றார்.
‘விழித்தெழு’ படம் மார்ச் 3-ம் தேதி திரைக்கு வருகிறது.