- சினிமா

தி கிராண்ட் மாஸ்டர் – திரை விமர்சனம்

தி கிராண்ட் மாஸ்டர் – திரை விமர்சனம்

சதுரங்கப் பலகையின் கட்டங்களில் வர்க்கப் போராட்டத்தையும், தனிநபரின் திறமையையும் மோதவிட்டுப் பேசுகிறது ‘தி கிராண்ட் மாஸ்டர்’.

“திறமைக்கு முன் ஏழை-பணக்காரன் எனும் பாகுபாடு எடுபடாது” என்பதை மையப் புள்ளியாகக் கொண்டு இயங்கியிருக்கிறது திரைக்கதை.

தலைநகரில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் அபர்ணதியின் கணவர் லிங்கேஷ் மறைந்துவிட, தன் ஒற்றைப் பிள்ளையான அஸ்வினை ஒரு வழக்கறிஞராக்க வேண்டும் என்பதே அவரின் ஒரே லட்சியம்.

ஆனால், அரசுப் பள்ளியில் பயிலும் சிறுவன் அஸ்வினின் கவனம் முழுவதும் செஸ் காய்களின் மீதே சுழல்கிறது. அதற்குப் பள்ளி ஆசிரியரின் தரப்பில் இருந்து கடும் தடைகளும் எழுகின்றன.

ஒரு காவல் அதிகாரியின் கரம்பற்றி பள்ளி அளவிலான செஸ் போட்டியில் களம் காணும் அஸ்வின், தன் அசாத்திய திறமையால் வெற்றியைத் தழுவுகிறான்.

இந்த வெற்றி, அவனுள் ‘செஸ் கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்ற பெருங்கனவை விதைக்கிறது.

ஆனால், வெறும் திறமை மட்டுமே வெற்றியைத் தீர்மானித்துவிடுமா? வறுமை, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, சதுரங்கச் சங்கத்தின் தலைவரான சுரேஷ் மேனன் வடிவில் வரும் முட்டுக்கட்டைகளையும் அஸ்வின் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதிகார வர்க்கத்தின் இந்த எதிர்ப்புகளைக் கடந்து, தன் தாயின் கனவையும் தன் லட்சியத்தையும் அந்தச் சிறுவன் வென்றெடுத்தானா என்பதே மீதிக்கதை.

தூய்மைப் பணியாளர் கதாபாத்திரத்தில் அபர்ணதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கணவனை இழந்த வேதனை, மகனின் எதிர்காலத்திற்கான தவிப்பு எனத் தாய்மையின் கனதியை உணர்வுப்பூர்வமாகக் கடத்துகிறார்.

அமைதியான உடல்மொழியுடன் அஸ்வினாக வரும் சிறுவனின் நடிப்பு கவனிக்க வைக்கிறது; குறிப்பாகப் பள்ளிக் கழிவுகளை அகற்றும் காட்சியில் இயலாமையை அழகாகக் கடத்தியிருக்கிறான்.

லிங்கேஷ் தனது பங்களிப்பை நேர்த்தியாகச் செய்திருக்க, வில்லத்தனத்தில் சுரேஷ் மேனன் வழக்கம் போல் மிரட்டுகிறார்.

விளையாட்டு அடிப்படையிலான கதைகள் பல வந்திருந்தாலும், செஸ் விளையாட்டைச் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஆயுதமாகக் கையாண்டதில் இயக்குநர் வெற்றி செழியன் முத்திரை பதிக்கிறார்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan