- சினிமா

டோரத்தி _ விமர்சனம்

டோரத்தி _  விமர்சனம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின்  இசையில் உருவாகியிருக்கும் ‘டோரதி’, தமிழ் சினிமாவில் அரிதாக நிகழும் ஒரு மிகச்சிறந்த உணர்வுப்பூர்வமான படைப்பு.

நட்பின் ஆழத்தையும், சமூகத்தின் பிற்போக்குத்தனங்களையும் ஒருசேரப் பேசும் வித்தியாசமான திரைக்கதை இது.

1990-களின் மதுரை கிராமத்து பின்னணியில் நகர்கிறது கதை. சிறுவயது தோழர்களான கார்த்தியும் (ரிஷிகாந்த்), சுப்புவும் (சனந்த்) இணைபிரியாத நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

ஆணாதிக்கமும் சாதிய முரண்களும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த சுப்புவின் வாழ்வில், டோரதியின் (கீர்த்தி சுரேஷ்) வருகை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

எதிர்பாராத ஒரு துயர சம்பவத்தால் டோரதி இறக்க, சுப்புவின் உலகம் தலைகீழாக மாறுகிறது. தன்னை திருநங்கையாக உணரும் சுப்பு அதை உலகுக்கு உணர்த்த வேண்டிய  கட்டாயம் ஏற்படுகிறது.

இதை ஏற்​க முடியாத அவனது பெற்றோர் சொந்த மகனையே  கொலை செய்யத் துணிகிறார்கள்.

வறட்டு கெளரவத்தையே பெரிதாக நினைக்கும் சொந்தக் குடும்பத்தின் கொடூரமான தாக்குதலிலிருந்து தன் தோழனைக் காக்கப் போராடும் கார்த்தியின் பாசப் போராட்டமே படத்தின் மீதிக்கதை.

சனந்த் தன்  மிகச் சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.  முதற்பாதியில் துடிப்பான கிராமத்து இளைஞனாகவும், இரண்டாம் பாதியில் திருநங்கையின் வலியையும் ஏக்கம் நிறைந்த அகவுணர்வையும் பிரதிபலிக்கும் காட்சிகளிலும் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

ரிஷிகாந்த், நண்பன் மீதான அசைக்க முடியாத அன்பு, அவனை புதிய பரிமாணத்தில் பார்க்கும்போது எழும் மனப்போராட்டம் எனச் சவாலான உணர்ச்சிகளை மிக இயல்பாகக் கையாண்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் குறைவான நேரமே திரையில் தோன்றினாலும், கதையின் நகர்விற்கும் முக்கியத் திருப்பத்திற்கும் தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.

முத்துகுமார் சுப்புவின் தந்தையாக ஆணாதிக்கத்தின் கொடூர முகத்தை அச்சுறுத்தும் வில்லத்தனத்துடன் இயல்பாகப் பிரதிபலித்துள்ளார்.

சௌந்தரராஜா, ராம், திருநங்கை ஜீவா மற்றும் சிறுவயதுக் கதாபாத்திரங்களில் நடித்த சிறுவர்கள் என அனைவரும் கதையின் ஓட்டத்திற்குத் தேவையான வலுவான பங்களிப்பைத் தந்துள்ளனர்.

இப்படத்தின் உயிர்நாடியே இசைஞானி இளையராஜாவின் இசைதான். ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’, ‘வண்ணக்கிளி’ போன்ற பாடல்களின் உணர்வுப்பூர்வமான பயன்பாடும், ஆடு/சேவல் சண்டைக் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒலிக்கும் பின்னணி இசையும் காட்சிகளின் தீவிரத்தை பலமடங்கு கூட்டுகின்றன.

குறிப்பாக, இறுதிக்காட்சியில் ஒலிக்கும் இளையராஜாவின் குரல் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ். திரு, 90-களின் மதுரை கிராமத்து ஈரப்பதத்தையும், இரண்டாம் பாதியில் வடஇந்தியப் பெருவழியில் நிகழும் லாரிப் பயணத்தின் வறண்ட நிலப்பரப்பையும் காட்சிப்பூர்வமாக மிக அழகாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.

வெளிச்சம் மற்றும் நிழலின் நுட்பமான பயன்பாடு திரையில் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.

பாலினச் சமத்துவம், ஆணாதிக்கக் கொடூரம் மற்றும் திருநங்கைகளின் வாழ்வியல் சிக்கல்கள் என மிகவும் உணர்ச்சிகரமான கருவைக் கையில் எடுத்து நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர்.

முதற்பாதியை நட்பு மற்றும் கிராமத்து பின்னணியில் சுவாரஸ்யமாகத் தொடங்கி, இரண்டாம் பாதியை ஒரு பரபரப்பான ‘ரோட்-டிராவல் த்ரில்லராக’ மாற்றியிருப்பது சிறப்பு.

ஆபாசமோ அல்லது எல்லை மீறிய வசனங்களோ இன்றி, சமூகத்தின் பிற்போக்குத்தனத்தை மிக நுட்பமான சினிமாக் கிராஃப்ட் மூலம் சாடியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

பெண்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகளைப் பேசும் கூர்மையான வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.

வழக்கமான வர்த்தகப் படங்களின் பாணியிலிருந்து விலகி, மாற்றுச் சினிமாவாகவும், சமூக மாற்றத்திற்கான குரலாகவும் ஒலிக்கும் ஒரு துணிச்சலான  படைப்பு ‘டோரதி’. ‘

இறைவி’ திரைப்படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜின் கலைப்பயணத்தில் மைல்கல்லாக நிலைத்து நிற்கும் ஒரு மிகச்சிறந்த காவியம்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan