
யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்ட ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். பெண்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும், தங்களது ஆட்சியைப் பாதுகாக்கப் போராடும் கேங்க்ஸ்டர் உலகத்தை நம் கண்முன் கொண்டு வர இருக்கும் ‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
பெர்னூரு என்ற கற்பனையான அரசாட்சியையும் அங்கு அதிகாரம் செலுத்தும் குடும்பங்களையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. இங்கு பெண்களே முன்னின்று தலைமை தாங்குவதுடன், தங்களுக்குச் சொந்தமான அதிகாரத்தையும் உரிமைகளையும் தீவிரமாகப் பாதுகாக்கின்றனர். ஆனால், தலைமுறை தலைமுறையாக இந்த அரசாட்சியை நிலைநிறுத்தி வந்த வலிமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் பின்னால் பல்வேறு மோதல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாகப் பெர்னூருவை ஆட்சி செய்து வரும் பாரம்பரியத்துக்கு வெளியிலிருந்து ஒருவர் சவால் விடுக்கும்போது, விசுவாசங்கள் சோதிக்கப்படுகின்றன, பகைமை தீவிரமடைகிறது, பழைய காயங்கள் மீண்டும் வெளிப்படுகின்றன. இதனால் அந்த அரசாட்சியின் சமநிலை கேள்விக்குள்ளாகிறது.
‘அக்கா’ தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான பவானி மற்றும் ருத்ராவாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். இவர்களின் வெவ்வேறு லட்சியங்களும் கொள்கைகளும் தீவிரமான மோதலுக்கு வழிவகுக்கின்றன. இவர்களுக்கிடையேயான மோதல் ஏற்கெனவே நிலவி வரும் அதிகார அமைப்பையே சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதிகாரம், விசுவாசம், குடும்பம், பழிவாங்குதல் ஆகியவற்றை இந்தத் தொடர் பேசுகிறது. கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோருடன் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் தொடர் பிரிவுத் தலைவர் தன்யா பாமி பகிர்ந்து கொண்டதாவது, “நல்ல கதைகளையும் பார்வையாளர்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவதில் நெட்ஃபிளிக்ஸ் எப்போதும் ஆர்வமாக உள்ளது. ’அக்கா’ தொடரின் மூலம் பார்வையாளர்கள் பெர்னூரு என்ற கற்பனை உலகத்துக்குள் நுழைவார்கள். அங்கு பெண்கள் வெறுமனே கதையின் ஒரு பகுதியாக மட்டுமில்லாமல், அதிகார மையங்களாக இருக்கிறார்கள். ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நுணுக்கமாக புரிந்து கொண்டு அசாதாரணமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஆதித்யா சோப்ராவின் கற்பனையில் உருவான ‘அக்கா’, யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடனான எங்களது தொடர்ச்சியான கூட்டணியின் மற்றொரு முக்கியப் படைப்பாகும். பெர்னூருவின் மோதல்கள், சவால்கள், பல்வேறு அடுக்குகளைக் கொண்ட கதைக்களம் மற்றும் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பெண்களின் கதைகளைப் பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.
எழுத்தாளரும் இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டி பகிர்ந்து கொண்டதாவது, “கேங்ஸ்டர் கதைகளுக்கென தனித்துவமான விதிகளைக் கொண்ட ஓர் உலகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதுதான் ‘அக்கா’ கதையை என்னை உருவாக்க வைத்தது. அதேசமயம், வழக்கமாக இத்தகைய கதைகளின் மையத்தில் இடம்பெறாத கதாபாத்திரங்கள் மற்றும் உறவுகளின் வழியாக ஒரு பிரம்மாண்டமான, பொழுதுபோக்கு நிறைந்த கதையைச் சொல்லவும் விரும்பினேன். பல தலைமுறைகளாகப் பெண்களால் வடிவமைக்கப்பட்ட உலகம்தான் பெர்னூரு. இங்கு அதிகாரம், பாரம்பரியம், பகைமை ஆகியவை புதிய மற்றும் எதிர்பாராத விதங்களில் வெளிப்படுகின்றன.
கீர்த்தியும் ராதிகாவும் பவானி, ருத்ரா ஆகிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். சிறப்பான மற்ற நடிகர்களுடன் இணைந்து, பார்வையாளர்கள் விரும்பக்கூடிய, கேள்வி எழுப்பக்கூடிய, ஆதரிக்கத் தோன்றக்கூடிய கதாபாத்திரங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தக் கதையின் மீது நம்பிக்கை வைத்து, அதன் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்க உதவிய ஆதித்யா சோப்ரா, அக்ஷய் விதானி, யோகேந்திர மோக்ரே மற்றும் யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் குழுவினர் அனைவருக்கும் நன்றி. தனித்துவமான, பிரம்மாண்டமான கதைகளை ஆதரவளிக்கும் நெட்ஃபிளிக்ஸுக்கும் எனது நன்றி” என்றார்.
பவானி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து கொண்டதாவது, “எதனை ஆதரிக்கிறோம் என்பதைத் தெளிவாக அறிந்த ஒரு பெண்தான் பவானி. தனது பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாக்க எதையும் செய்யத் துணிவாள். அவளுடைய வலிமைக்கும் அதிகாரத்துக்கும் பின்னால் இருக்கும் முடிவுகள் எதுவும் எளிதானவை அல்ல என்பதுதான் அந்தக் கதாபாத்திரத்தைச் சுவாரசியமானதாக மாற்றுகிறது. குறிப்பாக, பணயம் வைக்கப்படும் விஷயங்கள் மிக முக்கியமானவையாக இருக்கும்போது அவள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னும் தீவிரமடைகின்றன. பவானி வாழும் உலகத்தையும் அவள் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்த டிரெய்லரில் நீங்கள் பார்ப்பது வெறும் அறிமுகம்தான்.
ராதிகாவுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவம். பவானியும் ருத்ராவும் முற்றிலும் எதிரானவர்கள். அவர்களுக்கிடையேயான உறவும் மோதலும் கதையை பரபரப்பாக கொண்டு செல்லும். இந்தக் கதைக்காக யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் ‘அக்கா’ தொடரைக் கொண்டு செல்லும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பவானியின் பல்வேறு பரிமாணங்களைப் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
ருத்ரா கதாபாத்திரம் குறித்து ராதிகா ஆப்தே பகிர்ந்து கொண்டதாவது, “தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் தன்னை வரையறுத்துக்கொள்ள அனுமதிக்காத துணிச்சலான, லட்சியமிக்க ஒரு பெண் ருத்ரா. ஏற்கெனவே நிலவி வரும் அதிகார அமைப்புக்குச் சவால் விடவும் தயங்கமாட்டாள். ‘அக்கா’ தொடரில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், இங்குள்ள மோதல் வெறுமனே யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மட்டுமல்ல என்பதுதான்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்கும் வெவ்வேறு கொள்கைகள், விசுவாசங்கள், தனிப்பட்ட இலக்குகள் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கீர்த்தியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம். நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். பார்வையாளர்கள் இந்தத் தொடரை எப்படி வரவேற்கிறார்கள் என்பதை தெரிந்த் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
‘தி ரொமான்டிக்ஸ்’, ‘தி ரயில்வே மென்’, ‘மஹாராஜ்’, ‘மண்டலா மர்டர்ஸ்’ உள்ளிட்ட பாராட்டுகளைப் பெற்ற படைப்புகளைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் மற்றொரு தொடராக ‘அக்கா’ அமைந்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் குறித்து:
நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகளை இந்நிறுவனம் வழங்குகிறது. சந்தாதாரர்கள் தங்களுக்குப் பிடித்த உள்ளடக்கங்களை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். விரும்பிய நேரத்தில் நிறுத்தி வைக்கவும், மீண்டும் தொடர்ந்து பார்க்கவும் முடியும். மேலும், தங்களது சந்தா திட்டங்களையும் எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ளலாம்.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் குறித்து:
மறைந்த யஷ் சோப்ராவால் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யஷ் ராஜ் ஃபிலிம்ஸ், இந்தியாவின் முன்னணி தனியார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும், நாட்டின் மதிப்புமிக்க பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்துவது, திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றுவது, இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய வரவேற்பை விரிவுபடுத்துவது எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
முழுமையான பொழுதுபோக்கு நிறுவனமாகச் செயல்படும் YRF, திரைப்படத் தயாரிப்பு, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச விநியோகம், இசை, டிஜிட்டல் உள்ளடக்கம், சந்தைப்படுத்துதல், டேலண்ட் மேனேஜ்மெண்ட், உரிமம் வழங்குதல், வணிகப் பொருட்கள், பிராண்ட் கூட்டாண்மைகள் மற்றும் ஸ்டுடியோ செயல்பாடுகள் எனத் திரைப்படம் மற்றும் உள்ளடக்க உருவாக்கத்தின் அனைத்துத் துறைகளிலும் செயல்படுகிறது.
இந்தியாவின் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட முன்னணி திரைப்படத் தயாரிப்பு மையங்களில் ஒன்றைத் தனது வசம் கொண்டுள்ள YRF, படைப்பாற்றல் சிறப்பையும் தொழில்துறைப் புதுமைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து, இந்தியப் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது.






