- சினிமா செய்திகள்

‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குநர் சசிகுமார்!

அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குநர் சசிகுமார்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் ‘அரிகொம்பன்’ திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டார்.

காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

காட்டுக்குள் இரண்டு கிராமங்களைப் பிரம்மாண்டமாகச் செட் அமைத்து, அந்தக் கிராம மக்களின் வாழ்வியலையும் காட்டு யானையையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இதன் இயக்குநரும் கதாநாயகனுமான மிதுன் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது…

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan