- சினிமா செய்திகள்

மண்டாடி _ விமர்சனம்

மண்டாடி _ விமர்சனம்

கடலையும் கடல் சார்ந்த வாழ்வியலையும் கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் போராட்டம், காதல் வாழ்க்கை,  பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் இயல்பு, ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் மண்டாடி .

பாய்மர படகு போட்டி போட்டியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி தருபவர் சத்யராஜ் .

இவரிடம் பயிற்சி பெறும் சீடர்களான சூரியன் மற்றும் சுகாசும் நண்பர்களாக இருந்தாலும் கால ஓட்டத்தில் எதிர் எதிர் திசைக்கு மாறி பகைவர்களாகிவிடுகின்றனர்.

இதன் காரணமாக சொந்த ஊரான ராமநாதபுரததை விட்டு விலகி சென்னைக்கு வந்து வாழ்க்கையை தொடர்கிறார் சூரி.

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூரி சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

அத்துடன் இனி பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்பதில்லை என்ற முடிவில் இருந்த சூரி படகுப்போட்டி பயிற்சியாளராக மாறுகிறார்.

படகு போட்டி நடக்கும் சமயத்தில் ஒரு போட்டியாளர் வராத காரணத்தால் சூரி, தன் எதிரி சுகாசுக்கு எதிரான குழுவுடன் களம் இறங்கி படகு போட்டியில் பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இதில் சூரியை கொல்லவும் பல சதித் திட்டங்கள் திட்டப்படுகின்றன.

சூரி அவற்றை எல்லாம் எப்படி எதிர் கொண்டார்? இறுதியில் வென்றது யார்?என்பதுதான் மண்டாடி படத்தின் கதை.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக உயர்ந்து,  இன்று மண்ணாடி படத்தின் மூலம் குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார் சூரி.

மொத்த படத்தையும் தன் தோளில் சூரி சுமந்து இருக்கிறார் என்றால் மிகையாகாது.

பாய்மரப் படகு போட்டிக்காக உடலை வருத்திக் கொண்டு அவர் மேற்கொள்ளும் பயிற்சிகள் அசத்தலான காட்சிகளாக அமைந்து இருக்கின்றன.

படத்தின் சிறப்பம்சங்களில் முதலிடம் பெறுவது எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவுதான்.

கடலலை தாலாட்டுவது போன்ற சுகமான ஒளிப்பதிவு, நாமே சிறிது காலம் கடலில் இருந்துவிட்ட வந்த உணர்வை தருகிறது.

பிளாஷ்பேக்கில் வரும் சூரி_ மகிமா நம்பியார் காதல் காட்சிகள் கவித்துவமாக இருக்கின்றன.

காதலித்த பெண் வேறு ஒருவருக்கு மனைவியாகிவிட்டாலும், அவளது மகனின் உயிரை எதிரியிடமிருந்து  காப்பாற்றும் கனமான வேடம் சூரிக்கு .அதை தன் முதிர்ச்சியான நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூரி.

இறுதிப் பகுதியில் வரும்  படகு போட்டி காட்சிகள் ஆங்கில படங்களுக்கு நிகரான தொழில்நுட்பத்துடன்  படமாக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் திரை உலகம் இதுவரை கண்டிராத கடல் சார் கதைக் களத்தை கவிதை போல் திரையில் வடித்த அறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தியின்  பாராட்டத்தக்க முயற்சி மண்டாடி.

அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க வித்தியாசமான திரைப்படம்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan