
‘சிக்மா’: விமர்சனம்
தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழ்த் திரையுலகின் டாப் ஸ்டாருமான விஜய்யின் செல்லப்புதல்வர் ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் தடம் பதிக்கும் முதல் படைப்பு ‘சிக்மா’.
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக ரவுண்டு கட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் திரையரங்குகளை அதிரடியாகத் தொட்டுள்ளது.
வழக்கமான பார்முலாக்களைத் தாண்டி, வெளிநாட்டு மாஃபியா லாக்கர், கோடி கணக்கில் பணம், கடத்தல் மற்றும் சாவியை வைத்து அரங்கேறும் சண்டை என முழுமையான ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் ஜானரில் இப்படம் ரசிகர்களுக்குத் தரமான டைம்பாஸ் விருந்தாக அமைந்துள்ளது.
கதைப்படி, தன் தாயின் நினைவாக நூலகம் நடத்தும் ஹீரோ சந்தீப் கிஷனுக்குத் தந்தை வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கிறது.
அதிலிருந்து தப்பிக்க அவர் சூதாட்ட கிளப்புக்குச் செல்ல, அங்கே வில்லன் கும்பலின் போதைப்பொருள் புழக்க விடியோக்கள் அடங்கிய பென்டிரைவும், ஆயிரம் கோடி பணம் அடங்கிய லாக்கர் சாவியும் தற்செயலாக அவர் கைக்குக் கிடைக்கிறது.
இதை வைத்து வில்லனை மிரட்டிப் பணம் பறிக்கத் துணியும் நாயகன் இறுதியில் அந்தச் சாவியை மீட்டாரா, தன் கடனை அடைத்தாரா என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான ஒட்டுமொத்தக் கதைக்களம்.
திரையில் வழக்கம் போல வசீகரமான தோற்றத்துடன் வலம் வரும் சந்தீப் கிஷன், முதல் பாதியில் கடனை அடைக்கப் போராடும் இடத்திலும், பென்டிரைவைக் காட்டி மிரட்டும் சீன்களிலும் தனது துடிப்பான நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்.
ரேடியோ ஜாக்கியாக வந்து கலக்கும் ஃபரியா அப்துல்லாவுக்குப் படத்தில் அழுத்தமான காட்சிகள் பெரிதாக இல்லை என்றாலும், அன்பு தாசனின் எனர்ஜிட்டிக் நடிப்பும், வில்லி மகாலட்சுமியின் மிரட்டலான வில்லத்தனமும் தியேட்டரில் கவனிக்கும்படி அமைந்துள்ளது.
அதேசமயம், ஹீரோவுக்கு நிகரான மாஸ் காட்ட வேண்டிய வில்லன் சம்பத் ராஜ் மற்றும் சிவ் பண்டிட் பாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் வெயிட்டாகவும் மிரட்டலாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம்; சில இடங்களில் எமோஷனல் கனெக்ட் மிஸ் ஆவது மைனஸ்.
இசையமைப்பாளர் தமன் தன் பாணியில் இசையமைத்திருந்தாலும், பாடல்களும் பின்னணி இசையும் கதையை இன்னும் நெகிழ்ச்சியான உயரத்திற்குத் தூக்கிச் செல்லும் வகையில் பெரிதாகக் கைகூடவில்லை.
ஆனால், கேகேமராமேன் கிருஷ்ணன் வசந்த் மற்றும் டெக்னீசியன்களின் உழைப்பு திரையில் அப்பட்டமாகத் தெரிவதால், படம் செம ஸ்டைலிஷ் விசுவல் விருந்தாக மாறியுள்ளது.
குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு தியேட்டரை அதிர வைக்கும் ஆக்ஷன் மற்றும் ஃபைட் சீன் ஒட்டுமொத்தப் படத்தின் செம மாஸ் தருணமாக அமைந்துள்ளது.
ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்குத் தத்ரூபமாகவும் நேர்த்தியாகவும் மேக்கிங் செய்துள்ளார் ஜேசன் சஞ்சய்.
முதல் பாதியில் ரசிகர்களைக் கதைக்குள் அழைத்துச் செல்லும் விதம் மற்றும் காட்சி அமைப்புகள் அருமை.
இரண்டாம் பாதியில் சில தொய்வுகளும் யூகிக்கக்கூடிய திருப்பங்களும் இருந்தாலும், ஜேசன் சஞ்சய் தனது திரைக்கதை உத்திகளில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறுவது உறுதி.
சில லாஜிக் மீறல்களையும் சின்னக் குறைகளையும் தாண்டி, ஜேசன் சஞ்சய்யின் ஸ்டைலான இயக்கத்திற்கும் சந்தீப் கிஷனின் துறுதுறு நடிப்புக்கும் இந்த ‘சிக்மா’வை தாராளமாக ஒருமுறை தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.






