- சினிமா

சன் டிவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

‘மெர்சல்’ திரைப்பட பணப் பரிவர்த்தனை விவகாரம்: நடிகை ஸ்ரீபிரியாவின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு முக்கிய சட்ட வெற்றி!

‘மெர்சல்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்ட கடன் தொடர்பான வழக்கில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோரின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள், அக்டோபர் 16 அன்று, மெரினா ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. என். ராமசாமி ஆகியோருக்கு எதிராக சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த உரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற இணைப்பாணையை (Attachment) நீக்கக் கோரிய சன் டிவி நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும், அச்சொத்துகளின் மீது தனக்கு முழுமையான உரிமை இருப்பதாக என்றும் சன் டிவி நிறுவனம் முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

‘மெர்சல்’ திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் என். ராமசாமி தயாரித்திருந்தார்.  இத்திரைப்படத்திற்கு மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடன் வழங்கியிருந்தது.  செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் திரு. ராமசாமியால் செலுத்த இயலாத நிலையில், தனது வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டு சொத்துகளின் அசல் உரிமைப் பத்திரங்களைப் பிணையமாக வழங்கியதாக ராஜ்குமார் சேதுபதி தெரிவித்தார். திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழை (NOC) பெறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால், நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலைகள், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திரும்பின. இதையடுத்து, மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனக்குச் சேர வேண்டிய தொகையை வசூலிப்பதற்காகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்,நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் அந்த இரண்டு சொத்துகளுக்கும் இணைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு நீதிமன்ற இணைப்பாணை நடைமுறையில் இருந்தபோதிலும், அந்தச் சொத்துகள் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டன.

சொத்துகளின் மீதான நீதிமன்ற இணைப்பாணையை நீக்கக் கோரி, சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமைக் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தாங்கள் நல்லெண்ண அடிப்படையில் சொத்துகளைப் பெற்றவர்கள் என்றும், அச்சொத்துகளின் முழுமையான உரிமையாளர்கள் என்றும் அந்நிறுவனம் வாதிட்டது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள், சன் டிவி நிறுவனத்தின் உரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், சம்பந்தப்பட்ட சொத்துகளின் மீதான நீதிமன்ற இணைப்பாணையை நீக்கவும் மறுத்தார். இதன் மூலம், மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சொத்துகளின் மீது நடைமுறையில் இருந்த இணைப்பாணை தொடர்ந்து அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

***

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan