
ஜெடூசி _விமர்சனம்
தொடர் கொலைகளும், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் சமூகக் கொடுமையுமே ‘ஜெடூசி’ படத்தின் மையப்புள்ளி.
கொண்டை ஊசியால் குத்திக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் காவல்துறைக்குப் பெரும் புதிராக மாற, மறுபுறம் ஊடகத்தைச் சேர்ந்த சினி யுதன் சேகரிக்கும் துப்புகளும், சம்பவ இடங்களில் கிடைக்கும் ரத்த மாதிரிகளும் பிரதான பாத்திரத்தில் வரும் மலைவாசியான ஸ்ரீதரை நோக்கி விசாரணை வளையத்தை இறுக்குகின்றன.
கதையின் பின்னணியும் திருப்பமும்
நீதிமன்றத்தில் மட்டுமே உண்மையைச் சொல்வேன் என உறுதியாக நிற்கும் ஸ்ரீதரின் கடந்த காலம், ஜவ்வாது மலையடிவாரத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் விரிகிறது.
கல்லூரிக்குச் சென்ற மாமன் மகள் ஸ்வேதாவை கல்லூரியில் சேர்மன் ஏ.வெங்கடேஷ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் எந்த அளவுக்குச் சீரழித்தார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது, கதையின் வேகத்தில் சூடு பிடிக்கிறது.
தொடர் கொலைகளுக்கு காரணம் என்ன? அதிகார பலம் கொண்ட ஏ. வெங்கடேஷை சட்டத்தின் முன் நிறுத்த முடிந்ததா, என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயற்சித்திருக்கிறது படம்.
நடிப்பும் தொழில்நுட்பமும்
பழங்குடி இளைஞனாகவும், அநீதிக்கு எதிராகக் கொந்தளிக்கும் கதாபாத்திரத்திலும் ஸ்ரீதர் பொருந்திப் போகிறார்.
குறிப்பாக, இறுதிக்கட்டத்தில் நீதிமன்றத்தில் பேசும் வசனம் நீண்டதாக இருந்தாலும் அதில் உள்ள வலியை உச்சரிப்பில் கொண்டு வந்திருப்பது கவனிக்க வைக்கிறது.
ஸ்வேதா தன் பாத்திரத்திற்கு ஏற்ப இயல்பாக நடித்திருக்கிறார்; மலைவாழ் மண்ணின் மற்றும் நவீன தோற்றங்களில் இயல்பாக பொருந்துகிறார்.
வில்லன் வேடத்தில் ஏ.வெங்கடேஷ் வழக்கமான பாணியில் வருகிறார். சினி யுதன், பிளாக் பாண்டி, பவா செல்லதுரை, ஜெயந்திமாலா, அருவி மதன், அசோக் பாண்டியன் ஆகியோரும் தத்தமது பகுதிகளை நிறைவு செய்கிறார்கள்.
காடுகளும் மலைகளும் நிறைந்த பகுதிகளில் DOP நாகஅர்ஜுனின் ஒளிப்பதிவு களத்தின் தன்மையைக் கடத்துகிறது.
விக்னேஸ்வரன் இசையில் உருவான கவிஞர் ழகரத்தின் பாடல்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
என்ன குறைகள்? எது பலம்?
பெண்கள் பாதுகாப்பை முன்வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் நட்ராஜ் ஏகாம்பரத்தின் முயற்சி வரவேற்புக்குரியது.
ஆனால், சில காட்சிகள் யதார்த்தத்திலிருந்து விலகி நிற்கின்றன.
ரத்த மாதிரியை குறிப்பிடும்போது “ஃபாரின் பிளட்” என்று சொல்வது, “செத்த பிரேதத்தின்…”என்று ஒரு பாத்திரம் பேச ஆரம்பிப்பது போன்ற சில நெருடலாக இருக்கின்றன.
மாணவியாக இருந்த ஒருவரை நீதிபதியாகக் காட்டி நீதிமன்ற வாசலில் நடக்கும் சந்திப்பும், ஸ்வேதாவின் துயரத்துக்கு உடனிருந்த மாணவிகளே உடந்தையாக இருந்ததாகக் காட்டப்பட்டிருப்பதும் திரைக்கதையின் பலவீனங்களாகத் தெரிகின்றன.
சமூகப் பிரச்சினையைக் கமர்ஷியல் பாணியில் அணுகியிருக்கும் விதத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும், குறைந்த வளங்களுக்குள் ஒரு அழுத்தமான கருத்தைச் சொல்ல முயன்ற படைப்பாக ‘ஜெடூசி’ நிற்கிறது.






