- சினிமா

சிட்டுக் குறிஞ்சி _ விமர்சனம்

சிட்டுக் குறிஞ்சி _ விமர்சனம்

பறவைகள் நிறைந்த மலைப் பகுதி  ஊரைக் குறிக்கும் ‘சிட்டுக் குறிஞ்சி’, இயற்கை எழிலுக்குள் புதைந்திருக்கும் மர்ம முடிச்சுகளையும், மறுபிறவித் திருப்பங்களையும் இணைத்துப் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜூட் ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை வி ஜே மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ளார்.

ரஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், வி ஜே பப்பு, ஜி எம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மாயமாகும் வீடும், அவிழும் மர்மமும்

வத்தலகுண்டிலிருந்து அதிகாலைப் பேருந்தில் கொடைக்கானல் வரும் மலையாள இளைஞன் (ரஜித் மேனன்), அலுவல் நிமித்தமாக வனத்துறை அதிகாரியைச் சந்திக்கிறான்.

தங்குமிடம் கிடைக்காத நிலையில், அந்த  ஊரின் எல்லையில் உள்ள ஒரு வீட்டில் உள்ள தம்பதியினருடன் தங்க வைக்கப்படுகிறான்.

கணவனுக்காகக் காத்திருக்கும் அந்த இல்லத்தரசி (நக்ஷா சரண்) பாசத்துடன் கவனித்துக்கொள்ள, திடீரென ஒரு நாள் அந்த வீடு மாயமாக மறைந்து போகிறது.

அந்தப் பெண்ணும் வேறொருவரின் மனைவியாக மாறுகிறாள். வன அதிகாரி, பால் விற்பவர் என அனைவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என மறுக்க, ஊர் மக்களும் காவல்துறையும் அவனிடம் கேள்விகளை எழுப்புகின்றனர்.

நண்பனான மற்றொரு மலையாளி (வி ஜே பப்பு) துணை நிற்க, முன்பு வந்த கீரை விற்கும் பெண் மட்டும் இவனை அடையாளம் கண்டு பேசுகிறாள்.

சந்தேகத்துடன் காட்டுக்குள் தேடிச் செல்லும் நண்பர்களுக்கு, முதலில் தங்கிய வீடு பாழடைந்த இடிபாடுகளாகக் கிடப்பது தெரிகிறது.

அதே வாயில், அதே அறை எனத் தத்ரூபமாக இருக்க, நினைவில் தோன்றும் இடத்தில் தோண்டிப் பார்க்கும்போது ஒரு திருமணப் புகைப்படம் கிடைக்கிறது.

அதில் கணவனாக இந்த மலையாள மேனனும், மனைவியாக வேறொரு பெண்ணும் (தீப்ஷிகா) இருப்பதைக் காண்கின்றனர். ஊர் முதியவர் (ராமச்சந்திரன்) மூலம் விசாரிக்கும்போது, முன்பு அங்கே வாழ்ந்த காதல் தம்பதி அண்ணாமலை (இதே ரஜித் மேனன்) மற்றும் அவரது மனைவி (தீப்ஷிகா) என்பதும், ஊர் முக்கியஸ்தர் (ஜி எம் குமார்) ஆதரவில் அவர்கள் வாழ்ந்ததும் தெரியவருகிறது.

நாவலும், மறுபிறவியின் முடிவும்

மறுபுறம், நெல்லூரில் பேருந்து ஏறும் பெண் (இவரும் தீப்ஷிகாவே) ஓடி வந்து ஏறும்போது விழாமல் காப்பாற்றுகிறான் ஓர் இளைஞன்   (ஸ்ரீராம் கார்த்திக்).

தன்னை ஒரு எழுத்தாளர் என்று கூறிக் கொள்ளும் அந்த இளைஞன், தான் எழுதும் நாவலின் இறுதிப் பகுதி முடியவில்லை எனக் கூறுகிறான்,

இதுவரை திரையில் பார்த்த காட்சிகளையே கதையாகச் சொல்லிவிட்டுப் புத்தகத்தைக் கொடுத்து மறைகிறான் அந்த இளைஞன்.

பேருந்தில் பயணித்த பயணிகளோ அவள் தனியாகவே பேசிச் சிரித்ததாகக் கூறுகின்றனர்.

நாவல் விஷுவல் காட்சிகளாக விரிவடைய, கொடைக்கானலில் அந்தக் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டதைப் பத்திரிகைகள் மூலம் அறிகிறாள் நெல்லூர் பெண்.

கொல்லப்பட்ட கணவரின் மறுபிறவியான மலையாள இளைஞன் அங்கே காத்திருக்க, மனைவியின் மறுபிறவியான அவள் எடுக்கும் முடிவும், நாவலின் இறுதிப் பகுதியை அவள் எப்படி எழுதுகிறாள் என்பதும் கதையின் மையமாக அமைகிறது.

பரிசோதனை முயற்சியும், தொழில்நுட்பமும்

கதாபாத்திரங்கள், சூழல்கள், கால இடைவெளிகள் என அனைத்தையும் மாற்றி அமைத்துப் பரிசோதனைக் கதையாக இதை அணுகியிருப்பது கவனிக்க வைக்கிறது.

அதிகாலைப் பேருந்தில் ஒலிக்கும் ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” பாடல் கதையின் உணர்வுக்குப் பொருத்தமாக இடம்பெற்றுள்ளது.

கீரைக்காரிக்கான நடிகைகளை மாற்றுவதும், கட்டப்பட்ட வீட்டிலும் சிதைந்த வீட்டிலும் மேனன் நடப்பதை மாறி மாறிப் பொருத்தும் காட்சிகளும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிரான்சிஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசத்தின் அழகைக் காட்சிப்படுத்துகிறது.

மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு கதையின் ஓட்டத்தைத் தக்கவைக்கிறது.

ரஜித் மேனன், தீப்ஷிகா, வி ஜே பப்பு, ஜி எம் குமார் ஆகியோர் இயல்பான நடிப்பைத் தர, நக்ஷா சரண் கவனிக்க வைக்கிறார். குறுகிய நேரமே வந்தாலும் சுஜாதா சிவகுமார் தனது தோற்றம், நடை, பாவனைகளால் தனித்து நிற்கிறார். வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் மர்மக் கேள்விகளுடன் ‘சிட்டுக் குறிஞ்சி’ ஒரு மாறுபட்ட முயற்சியாக அமைந்துள்ளது.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan