
தமிழில் திரைப்பட உலகில் உதவி இயக்குநர், மற்றும் நடிகர், டப்பிங் கலைஞர், மேடை நாடகக் கலைஞர், டப்பிங் கலைஞர்கள் சங்க நிர்வாக பொறுப்பாளர், என திரைத்துறையின் பல்வேறு தளங்களில் பயணித்து, தற்போது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் மூலம் நடிகராக தனது பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் கதிர் என்கிற கதிர்பாலு.
1968ஆம் ஆண்டு “எழுத்தாளர் தயாரிப்பாளர் இயக்குநர் திரு. டி. என். பாலு” – பிரேமா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் கதிர் என்கிற கதிர்பாலு.
சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. சைக்காலஜி படித்த இவர், சிறு வயது முதலே திரைத்துறை மீது கொண்டிருந்த தீராத ஆர்வத்தின் காரணமாக, திரைப்பட இயக்குநர் பி. வாசு அவர்களிடம் உதவி இயக்குநராக 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார்.
நடிகர் அருண்பாண்டியன், கவுதமி நடிப்பில் உருவான ‘அதிகாரி’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகத் தொடங்கிய இவரது திரைப்பயணம், அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 13 திரைப்படங்களில் தொடர்ந்தது. அதன்பின்னரும் ‘பொண்ணு வீட்டுக்காரன்’, ‘வாய்மையே வெல்லும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றி, தனது திரை அனுபவத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இயக்குநர் பி. வாசு அவ்வப்போது, “கதிர்… நீ இந்தக் கேரக்டரை பண்ணிடு” என்று கூறி, அவருக்கு சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.
அப்படித்தான் ‘இது நம்ம பூமி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கதிர்பாலு.
இதனை தொடர்ந்து ‘அம்மா வந்தாச்சு’, ‘வாலிபர் வெற்றிவேல்’, ‘உழைப்பாளி’, ‘பத்தினி’, ‘புலிவேஷம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
இயக்கத்தின் பின்னணியில் இருந்து நடிப்பின் முன்களத்திற்கு வந்த கதிர்பாலுவுக்கு, ஒவ்வொரு கதாபாத்திரமும் திரைத்துறையில் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
டப்பிங் கலைஞராக தனி அடையாளம் 1998ஆம் ஆண்டு முதல் டப்பிங் கலைஞராக தனது மற்றொரு பயணத்தைத் தொடங்கிய கதிர்பாலு, கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ற குரல் வெளிப்பாட்டின் மூலம் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.
2004ஆம் ஆண்டு வெளியான ‘ஜனனம்’ திரைப்படத்திற்காகவும், 2006ஆம் ஆண்டு பல திரைப்படங்களுக்காகவும், 2012ஆம் ஆண்டு வெளியான ‘பாண்டிய நாடு’ திரைப்படத்திற்காகவும், 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்திற்காகவும் சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான தமிழ்நாடு அரசு விருதுகளை பெற்றுள்ளார்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு
திரைத்துறையில் கலைஞராக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞர்களின் அமைப்பிலும் தொடர்ந்து பங்களித்து வரும் கதிர்பாலு, 2006ஆம் ஆண்டு முதல் டப்பிங் யூனியனின் செயற்குழு உறுப்பினராகவும், 2018ஆம் ஆண்டு முதல் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
கலைப் பயணத்துடன், சக கலைஞர்களுக்கான அமைப்புப் பணியையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவது அவரது திரைப்பயணத்தின் மற்றொரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.
மேடை நாடகத்திலும் முத்திரை!
2016ஆம் ஆண்டு டப்பிங் கலைஞர்கள் ஒருங்கிணைந்து அரங்கேற்றிய ‘ராகவேந்திரர்’ மேடை நாடகத்தில் சித்திக் மசூத்கான் கதாபாத்திரத்தில் நடித்த கதிர்பாலு, தனது மேடை நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
வெப் சீரிஸ் முதல் வெள்ளித்திரை வரை!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘வெள்ளை ராஜா’ வெப் சீரிஸில் நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டருடன் இணைந்து நடித்த கதிர்பாலு, தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்தார்.
அதன் பின்னர் ‘ஜே பேபி’, ‘மாமன்னன்’, ‘ருத்ரன்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றி, தனது நடிப்புப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் கதிர்பாலு, ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கதையின் போக்கில் தனது திரை இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
‘அன்பில் அவன்’… வில்லன் கதாபாத்திரம் கவனம் ஈர்த்த கதிர்பாலு!
இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் “எம்.எல்.ஏ. ராஜநாயகம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதிர்பாலு.
இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், இந்தப் திரைப்படத்தில் வில்லன் எம் எல் ஏ ராஜநாயகம் கதாபாத்திரத்தில் நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த கதாபாத்திரம் அவரது நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு புதிய பரிமாணமாக அமைந்துள்ளது.
‘அன்பில் அவன்’ படத்திற்குப் பிறகு, தற்போது ‘கொம்பன்’ புகழ் இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘இருளன்’ திரைப்படத்தில் கதிர்பாலு நடித்து வருகிறார்.
மாறுபட்ட களத்தில் உருவாகும் இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
அவரது தங்கை இயக்குநர் கவிதாபாலு இயக்கும் ‘ஆதாரம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தில் பிரபாகரன் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கதிர்பாலு நடித்துள்ளார்.
தங்கை கவிதா பாலு
இயக்கத்தில் அண்ணன் கதிர் பாலு நடிக்கும் இந்தக் கூட்டணி, குடும்ப உறவையும் கலைப் பயணத்தையும் இணைக்கும் ஒரு சுவாரஸ்யமான திரை முயற்சியாக அமைந்துள்ளது.
36 ஆண்டுகளைக் கடந்த கலைப்பயணம்!
1990ஆம் ஆண்டு உதவி இயக்குநராகத் தொடங்கிய பயணம்… அதன்பின் நடிகர்…
1998 முதல் டப்பிங் கலைஞர்…
தமிழ்நாடு அரசு விருதுகளைப் பெற்ற பின்னணிக் குரல் கலைஞர்… டப்பிங் யூனியனில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்தவர்… மேடை நாடகக் கலைஞர்… வெப் சீரிஸ் நடிகர்…
தொடர்ந்து திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்… என திரைத்துறையின் பல்வேறு தளங்களில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வருகிறார் கதிர் என்கிற கதிர்பாலு.
கதாநாயகன் என்ற ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பதைவிட, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டு பயணிப்பதே தனது பலம் என்பதை அவரது திரைப்பயணம் வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே ‘ரிவால்வர் ரீட்டா’, ‘அன்பில் அவன்’ “‘அன்பில் அவன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்து, நடிகர் கதிர் பாலு ‘இருளன்’ ‘ஆதாரம்’ என அடுத்தடுத்த படைப்புகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் பயணிக்கும் நடிகர் கதிர்பாலுவுக்கு, இனிவரும் காலங்களில் இன்னும் அழுத்தமான, வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமையட்டும்.
உதவி இயக்குநராகத் தொடங்கிய பயணம்…
நடிகராக தொடரும் பயணம்…
குரல் கலைஞராக பெற்ற அங்கீகாரம்…
மேடையிலும், வெப் சீரிஸிலும், வெள்ளித்திரையிலும் தொடர்ந்து ஒலிக்கும் குரல்…
36 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கதிர்பாலுவின் கலைப்பயணம்!






