- விமர்சனம்

‘ஹைக்கூ’ _ விமர்சனம்

‘ஹைக்கூ’ _ விமர்சனம்

ஹைக்கூ கவிதைகளின் முதல் இரண்டு வரிகளில் சொல்லப்பட்ட விசயத்தைஅப்படியே மாற்றி, மூன்றாவது வரியில் ஒரு எதிர்பாராத திருப்பத்தைத் தருவதுதான் அந்தக் கவிதையின் பலம்.

கிட்டத்தட்ட காதலும் அப்படித்தான்; அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்பதை எந்தக் காதலராலும் கணிக்க முடியாது. இந்த அழகிய தத்துவார்த்தப் புள்ளியில்தான் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி தனது படைப்புக்கு ‘ஹைக்கூ’ எனப் பெயரிட்டுள்ளார்.

பார்க்கச் சிறிய கதையாகத் தெரிந்தாலும், அதன் வீரியமும் உணர்வுகளின் ஆழமும் வெள்ளித்திரையில் பிரம்மாண்டமாய் எதிரொலிக்கிறது.

கதைக் களமும் நடிகர்களின் நடிப்பும்:
ஒரு நிறுவனத்தில் நிம்மதியான வேலையில் இருக்கும் ஹீரோ ஏகன், நம் வீட்டுப் பையன் போன்ற எதார்த்தமான முகத்தோடு திரையில் வலம் வருகிறார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை எளிதில் ஈர்க்கிறது.

கல்லூரி காலத்தில் ஒரு பெண்ணைக் தீவிரமாகக் காதலித்துத் தோற்றுப்போகும் ஏகன், பிற்காலத்தில் மற்றொரு பெண்ணின் காதலில் விழுகிறார்.

முதல் காதலில் செய்த தவறுகளை இந்தமுற செய்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும்  செயல்படுகிறார்.

ஆனால், அவரது இந்தக் கூடுதல் கவனமே இரண்டாம் காதலிக்குச் சிக்கலாக மாறுகிறது.

இந்த முரண்பாடான உளவியலையும், இரண்டு காதல்களுக்கு இடையே தவிக்கும் ஒருவனின் தவிப்பையும் மையமாக வைத்து நகர்கிறது படத்தின் கதை.

நாயகிகளாக நடித்துள்ள ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் சாராம்சத்தை உணர்ந்து மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, காதலின் வெவ்வேறு பரிமாணங்களை இருவரும் தங்களது எதார்த்தமான முகபாவனைகளால் தாங்கிப்பிடித்துள்ளனர். 

இசையும் ஒளிப்பதிவும்:
இப்படத்தின் ஆன்மா என்று இசையமைப்பாளர் சித்து குமாரைக் குறிப்பிட வேண்டும். அவரது அட்டகாசமான பின்னணி இசையும், காதல் வைப் கூட்டும் பாடல்களும் படத்தின் பெரும்பலமாக அமைந்துள்ளன.

ஒவ்வொரு காட்சியின் உணர்வுத் தீவிரத்தையும் இசையின் மூலம் பார்வையாளர்களின் இதயத்திற்குக் கடத்தியுள்ளார்.

இவருடன் ஒளிப்பதிவாளர் காதல் நிரம்பி வழியும் எழில்மிகு பிரேம்களையும், நேர்த்தியான ஷாட்களையும் கம்போஸ் செய்து திரையை வண்ணமயமாக்கியுள்ளார். 

இயக்குநரின் முத்திரையும் இயக்கமும்:
ஒரு காதலில் தோற்றுப்போனவன், அடுத்த காதலில் பயணப்படும் போது அவனுக்குள் ஏற்படும் உளவியல் சிக்கல்களைத் தொட்டுக் காட்டியதில் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி முத்திரை பதித்துள்ளார்.

கம்ப்ளீட் காதல் கதையைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது உழைப்பு பல காட்சிகளில் சிறப்பாக வேலை செய்துள்ளது.

இருப்பினும், கதையில் இருந்த ஆழமும் நேர்த்தியும் சில காட்சிகளிலும் சின்ன சின்ன எமோஷன்களிலும் இன்னும் சற்று வலுவாக இருந்திருக்கலாம்.

ஆனாலும், ஒளிவுமறைவற்ற அன்பே ஒளிமயமான காதலைத் தரும் என்ற அழகான செய்தியுடன் வந்துள்ள இந்த ‘ஹைக்கூ’ இறுதிவரை மனதுக்கு நெருக்கமாகப் பயணிக்கிறது.

மொத்தத்தில்…
முதல் காதல் கொடுத்த வடுவோடு அடுத்த காதலை எதிர்கொள்ளும் மனிதர்களின் தவிப்பையும், எதிர்பார்ப்புகளையும் பேசும் இந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு ஒரு ‘அடடே ஆச்சர்யக்குறி’ கொடுக்கலாம்! தியேட்டர்களில் காதலைக் கொண்டாடத் தயாராகியுள்ளது இந்த எதார்த்தக் கவிதை!

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan