
மைத்திரி: திரை விமர்சனம்
(தயாரிப்பு: பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ் | எழுத்து, இயக்கம், நாயகன்: பரத் ஜே. எஸ். | நடிகர்கள்: காயத்ரி ஷான், நந்தன், ரவி எழுமலை, ஸ்ரீதர், சிவாங்கி)
மாறுபட்ட வாழ்வியல் சூழல்களில் இருந்து வரும் இரு துருவக் காதலர்கள், இந்தச் சமுதாயத்தில் சந்திக்க நேரிடும் இடைவிடாத போராட்டங்களையும், அவர்களின் மனப் போராட்டங்களையும் எதார்த்தமாகப் பேசி இருக்கிறார் இயக்குநர் பரத் ஜே. எஸ். .
மலையாளத் திரையுலகிலிருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் இசையமைப்பாளர் ஜோயல் ஜான்ஸ், தன் அழுத்தமான பின்னணி இசையின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் புது வடிவம் கொடுத்துள்ளார். குறிப்பாக கதையின் முக்கியமான திருப்பங்களில் இவரது இசை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
பெண்கள் சந்திக்கும் உடலியல் சார்ந்த சிரமங்களையும், இயற்கை அவர்களுக்கு வழங்கிய வலிமிகுந்த தருணங்களையும் ஆண்கள் எளிதில் கடந்துபோய்விடுகிறார்கள் என்பதை, எளிய பிச்சைக்காரர் ஒருவரின் சொல்லாடல் வழியாக வெளிப்படுத்தும் காட்சி பார்வையாளர்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.
வெவ்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட காதலர்கள் மீதான அவமதிப்புகளையும், தடைகளையும் நேரடியாகவே கேள்வி கேட்கிறது படம். கதையின் இறுதிக்கட்டக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை ஆழமாகப் பாதித்து, ஒருவிதக் கணத்த உணர்வை விட்டுச் செல்கின்றன. காதலை மையமாகக் கொண்டு சமுதாயத்தின் பல்வேறு முகத்திரைகளைக் கிழிக்க முயன்றிருக்கும் பரத் ஜே. எஸ்.-ன் படைப்புப் பாதை பாராட்டுக்குரியது.


