ஓ.ம் _ விமர்சனம்
2015-ஆம் ஆண்டு திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடந்த நிஜச் சம்பவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் படம் ஓம்
இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி ஆகியோரை ஒன்றிணைத்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி செதுக்கியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பே இத்திரைப்படம்.
நிஜ வாழ்வில் நிகழ்ந்த அதிர்வலைகளின் அடிப்படையில், செம்மரக் கடத்தல் சாம்ராஜ்யத்தையும் அதைத் தகர்க்கும் ரகசியக் காவல் வியூகத்தையும் மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ரெட் ஹில்ஸை மையமாகக் கொண்டு, உள்ளூர் மக்களின் பேராதரவோடு, கடல் கடந்து துபாய் வரை கொடிகட்டிப் பறக்கும் செம்மரக் கடத்தல் சக்கரவர்த்தியாக வலம் வருகிறார் ‘பர்மா’ கார்த்திகேயன் (மம்மூட்டி).
மறுபுறம் கடத்தல் கூட்டத்தை அடியோடு ஒழிக்க ஆந்திர வனத்துறை சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார் நித்யா ரெட்டி (சாய் பல்லவி).
கடத்தல்காரர்களின் வெறியாட்டத்திற்குத் தன் தந்தையைப் பறிகொடுத்த காயத்துடன், ‘Operation Mole’ (O.M) என்ற ரகசிய ஆபரேஷனை அவர் தொடங்குகிறார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, ரகசிய உளவாளியான பழனி என்ற திருக்குமரன் (தனுஷ்), கார்த்திகேயனின் நிழல் உலகத்திற்குள் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக நுழைகிறார்.
கார்த்திகேயனின் மனதை வென்று, அந்தக் கடத்தல் வலைப்பின்னலின் ரகசியங்களையும் ஆதாரங்களையும் திருக்குமரன் கைப்பற்றினாரா, உளவாளியின் முகத்திரை கிழிந்ததா என்பதே இப்படத்தின் சுவாரசியமான திரைக்கதை.
உள் குத்து உளவாளி பாத்திரத்தில் தனுஷ் தனக்கே உரிய ஸ்டைல் முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ளார். துவக்கத்தில் வரும் குழு நடன பாடலில் அசத்தலான ஆட்டத்தை போட்டு கைதட்டல்களை அள்ளுகிறார்.
இரக்க குணமும் கொண்ட நிழல் உலகத் தாதாவாக ‘பர்மா’ கார்த்திகேயன் பாத்திரத்திற்கு மம்மூட்டி தனது ஆளுமையால் உயிர் ஊட்டியுள்ளார்.
ஞஅவர் தோன்றும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், திரையில் வரும் ஒவ்வொரு நொடியும் ஒருவிதப் பரபரப்பையும் மரியாதையையும் கடத்திச் செல்கிறார். காவல் அதிகாரியாக மிடுக்கான நடை, கடத்தல்காரர்களைப் பந்தாடும் ஆக்ரோஷம் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களில் சாய் பல்லவி தனது நடிப்பின் அடுத்த பரிமாணத்தைக் காட்டி படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
இவர்களுடன் குறைவான நேரமே வந்தாலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ஶ்ரீ லீலா மனதில் பதிகிறார்.
Big bossஆக வரும் நஸ்ருதீன் ஷா, காவல் அதிகாரியாக சித்து ஜொன்னலகட்டா, மம்மூட்டியின் மனைவியாக ரேணு தேசாய், மற்றும் பிரசன்னா, தீனா, லல்லு ஆகியோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களைச் செவ்வனே செய்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் திகழ்கிறார். ‘அலேக்கா லோவா’, ‘ஃபா ஃபா’, ‘செஞ்சுடரே’ ஆகிய பாடல்கள் துள்ளலான தாளகட்டுடனும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுடனும் ஈர்க்கின்றன.
குறிப்பாக, இரண்டாம் பாதியில் ஒலிக்கும் ‘வீழா வீரா’ பாடலின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்து ‘மாஸ்’ விருந்தளிக்கிறது. ஒரு பிரம்மாண்ட கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான வீரியத்தை இசை அமைப்பாளர் கச்சிதமாகத் தந்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் எழில் கே. அரசு ‘ஓ.ம்’ உலகத்திற்குத் தேவையான பிரம்மாண்டத்தை தனது கேமரா கோணங்கள் வழி கடத்தியுள்ளார்.
படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் சுமார் 10 நிமிட நீளமான சிங்கிள் ஷாட் காட்சியும், அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் இரவு நேர சண்டைக் காட்சிகளும் ஒளியமைப்பிலும் காட்சி நேர்த்தியிலும் மிரட்டுகின்றன.
3 மணி நேரத் திரைப்படத்தைச் சலிப்பு தட்டாமல் நகர்த்துவதில் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணனின் உழைப்பு பளிச்சிடுகிறது.
முதல் பாதியில் உளவாளியின் ஊடுருவலையும் இடைவேளைத் திருப்பத்தையும் விறுவிறுப்பாக இணைத்துள்ள அவர், இரண்டாம் பாதியில் சில விளக்கக் காட்சிகள் சற்றே நீளமாக இருந்தாலும் கதையின் ஓட்டம் சிதையாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.
வறுமையின் பிடியில் சிக்கி செம்மரம் வெட்டச் செல்லும் அப்பாவித் தமிழர்களின் துயரத்தையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையையும் அழுத்தமாகப் பதிவு செய்ததற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. .
2015 சேஷாசலம் துப்பாக்கிச் சூடு நிகழ்வை அவர் காட்சிப்படுத்திய விதம் காண்போரின் மனதை உலுக்குகிறது.
அதிகார அமைப்பைத் தாண்டி நேர்மையாகச் செயல்படத் துடிக்கும் காவலர்களின் சவால்களையும், உளவாளிகளின் தனிப்பட்ட வலிகளையும் இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.
சமூக அக்கறை கொண்ட ஒரு ஜனரஞ்சகப் படைப்பாக ஓம் படத்தை உருவாக்கியதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெற்றியடைந்துள்ளார்.
அழுத்தமான நிஜச் சம்பவத்தின் பின்னணி, தனுஷ் – மம்மூட்டி – சாய் பல்லவி கூட்டணியின் அபாரமான நடிப்பு, சாய் அபயங்கரின் அதிரடி இசை மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் கூடிய ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லராக ‘ஓ.ம்’ மிளிர்கிறது.
சிறிய குறைகளைத் தாண்டி, திரையரங்கில் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய ஒரு தரமான படைப்பு இது!






