
சரியான பாதைகூட இல்லாத குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் கல்பனா என்ற சிறுமி, பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அஸ்ட்ரோநெட் ஆக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறாள்.
ஆனால் பத்தாம் வகுப்பு முடித்ததுமே, 16ஆவது வயதிலேயே கல்பனாவின் தந்தை கார் டிரைவர் கிருஷ்ணாவுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
முதல் இரவு அன்றே இதை தெரிந்து கொண்ட கிருஷ்ணா, தன் மனைவியின் கனவை தனதாக வரித்துக் கொண்டு அவரை விண்வெளி வீராங்கனை ஆக்க கடுமையாக போராடுகிறார்.
கல்பனாவின் கனவு நிறைவேறியதா? அந்தக் கனவை நனவாக்க இவர்கள் இருவரும் படும் போராட்டங்களும் சவால்களும் என்னென்ன என்பதுதான் ஆகாயத்தில் ஒரு தாரகை திரைப்படத்தின் கதை.
“நாம் இருவரும் பிரிந்து இருந்தால் தான் உன் கனவை நோக்கி நீ நெருங்கி செல்ல முடியும்…” என்று மனைவியிடம் சொல்லி மேற்படிப்புக்காக கேரளா அனுப்பிவிட்டு, கிருஷ்ணா வட மாநிலம் சென்று டபுள் ஷிப்ட் டிரைவராக வேலை பார்ப்பதெல்லாம் நெகழ வைக்கின்ற காட்சிகளாக அமைந்திருக்கின்றன. அலுங்காமல் குலுங்காமல் அழகு பொம்மைகளாக வரும் கதாநாயகிகளை நிறையவே பார்த்துவிட்ட நமக்கு கல்பனா என்ற அழுத்தமான வேடத்தில் தோன்றி அற்புதமாக நடித்திருக்கும் நாயகி சாத்விகா வீரவல்லி நெஞ்சில் நிறைகிறார்.
ஆர்வம், அழுகை, பயம், பதற்றம் என்று எல்லா விதமான உணர்ச்சிகரமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார் சாத்விகா.
துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரம் கதாநாயகிக்கு உதவும் வேடத்தில் நடிக்க ஒத்துக் கொள்வதே மிகப் பெரிய விஷயம். அதுவும் துல்கர் சல்மான் ஏற்ற வேடத்தை உணர்ந்து மிக அழகாக நடித்து படத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார்.
படத்தின் இரண்டாம் பாதியில வந்தாலும் ஸ்ருதிஹாசனின் கம்பீரமான நடிப்பு படத்துக்கு மிகவும் வலுவாக அமைந்திருக்கிறது.
குன்னம் கங்கராஜுவின் வலுவான கதையும், விறுவிறுப்பான திரை கதையும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும், சிஜி மற்றும் இதர தொழில்நுட்ப நேர்த்தியும் படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகின்றன.
தவறவிடாமல் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
குறிப்பாக பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுடன் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’.
மதிப்பெண் 4.5/5






