- விமர்சனம்

சீன் _ திரைப்பட விமர்சனம்

சீன் திரைப்பட விமர்சனம்

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் நாயகன் சூர்யா திடீரென அந்த பொறுப்பில் இருந்து விலக நினைக்கிறார். அதற்கு முன்பு சைக்கோ கில்லர் ஒருவனே பிடிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு வந்த சேர்கிறது. போலீஸ் பணியில் இருந்து விலக நினைக்கும் காரணம் என்ன சைக்கோ கில்லரை அவரால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் சீன் படத்தின் கதை.

சிங்கம் சீரிஸ் படங்களில் பாய்ந்து மிரட்டிய சூர்யா, இந்தப் படத்தில் புலியைப் போல, பதுங்கிப் பாய்கிறார்.

டி.எஸ்.பி இன்பராஜ் (சூர்யா), ஐந்து முறை ராஜினாமா கடிதம் கொடுத்தும் பணியில் இருந்து விலக அங்கீகாரம் கிடைக்காததால் தவிக்கிறார். விசித்திரமான விசாரணை மற்றும் முரட்டு சுபாவத்தால் மேலதிகாரிகளுக்கு எரிச்சலூட்டினாலும், வழக்குகளைத் துல்லியமாக முடிப்பவர். அதனால் அவரை இழக்க விரும்பாத குற்றப்பிரிவுத் தலைவர் ஸ்டீபன் (லால்) அந்த ராஜினாமாவைத் தடுத்து விடுகிறார்.

இதற்கிடையில், இன்பராஜ் ஏற்கனவே தீர்த்துவைத்த பழைய தொடர் கொலை வழகின்  பாணியில் நகரத்தில் அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறுகின்றன.

எந்தத் தடயமும் தராமல், மிகவும் கூலாகவும் பதற்றமின்றியும் இந்தக் கொலைகளை அரங்கேற்றும் புரொஃபஷனல் சீரியல் கில்லரான ஈஸ்வரன் (நஸ்லென்) காவல்துறையைச் சவாலுக்கு உட்படுத்துகிறான்.

பிரச்சினையின் தீவிரத்தை உணரும் இன்பராஜ், அதிகாரப்பூர்வ உதவிகளைத் தவிர்த்துவிட்டு தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு களமிறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

வழக்கமான மாஸ் போலீஸ் பிம்பங்களை முற்றிலும் உடைத்து எறிந்துவிட்டு, ஐம்பது வயதை நெருங்கும் மனிதனின் சலிப்பு, சிடுசிடுப்பு, இயல்பான பலவீனங்கள் எனத் தன் முழு நடிப்பையும் கொட்டியிருக்கிறார் சூர்யா; அவரது ஏளனமான உடல்மொழியும் வசன உச்சரிப்பும் படத்திற்குச் செம கலர் சேர்க்கின்றன.

மறுபுறம், சாக்லேட் தின்றபடியே கொடூரக் கொலைகளைச் செய்துவிட்டு குழந்தையைப் போலத் துள்ளிக் குதிக்கும் சைக்கோ வில்லனாக மிரட்டியிருக்கிறார் நஸ்லென்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நஸ்ரியாவின் மாயா கதாபாத்திரம், படத்தின் சீரியசான கிரைம் சூழலுக்கு ஒரு செம ரெப்ரெஷ்மென்ட்டைக் கொடுத்துள்ளதுடன் சூர்யாவுடன் இவர் பகிர்ந்துள்ள ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியும் பட்டையைக் கிளப்புகிறது.

லாலா மற்றும் ஆனந்தராஜ் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

கதையின் தாளகதிக்குத் தக்கவாறு சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் குறிப்பாக ‘ஏரோபிளேன் போல’ பாடலும் ரசிக்க வைக்கினறன.

வினீத் அகஸ்டியனின் கேமரா கோணங்களும் மர்மத்தைக் கடத்தும் வித்தகமும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

சில இடங்களில் திரைக்கதை சற்றுத் தொய்வடைந்தாலும், டார்க் ஹ்யூமர் கலந்த சுவாரஸ்யமான காட்சிகளும், சூர்யா – நஸ்லென் மோதல்களும் லாஜிக் மீறல்களையும் தாண்டி படத்தை ஒரு ஜாலியான, தரமான த்ரில்லர் அனுபவமாக மாற்றுகின்றன! வித்தியாசமான திரை அனுபவத்தை தரும் இந்தப் படத்தை தாராளமாக அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 4/5

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan