
அப்பா குட்டி _ விமர்சனம்
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு தந்தையின் பாசப் போராட்டத்தையும் மருத்துவச் சிக்கல்களையும் மையப்படுத்தி இயக்குநர் மு.மாறன் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’.
விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், உணர்வுப்பூர்வமான கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும், திரையாக்கத்தில் சற்றுத் தடுமாறியுள்ளது.
சென்னையிலிருந்து தன் பச்சிளம் பெண் குழந்தையுடன் ஊட்டிக்கு இடம்பெயரும் சூர்யா (விஜய் ஆண்டனி), அங்குப் படப்பிடிப்புத் தளங்களை ஏற்பாடு செய்யும் லொக்கேஷன் மேனேஜராகத் தன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.
யாருடைய துணையுமின்றித் தன் மகள் தியாவை (லிதன்யா) கண்ணும் கருத்துமாக வளர்க்கும் சூர்யாவின் அன்பையும் பொறுப்பையும் கண்டு, தியாவின் பள்ளி ஆசிரியையான அனிதாவிற்கு (ப்ரீத்தி அஸ்ரானி) அவர் மீது காதல் மலர்கிறது.
ஆனால், தன் கடந்த காலக் காயங்களால் அந்தக் காதலைச் சூர்யா நிராகரிக்கிறார்.
இப்படியான சூழலில், சிறுமி தியாவிற்கு ஓர் இக்கட்டான சூழல் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சூர்யா தனக்குள் பூட்டி வைத்திருந்த ரகசியங்களும் மர்மங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்குகின்றன.
தியாவிற்கு நேர்ந்த அந்தச் சிக்கல் என்ன, சூர்யாவின் உண்மையான பின்னணி என்ன, அனிதாவின் காதல் கைகூடியதா ஆகிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இத்திரைப்படம்.
நடிப்பைப் பொறுத்தவரை, தனக்குள் பல ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கும் அமைதியான கதாபாத்திரத்திற்கு விஜய் ஆண்டனியின் இயல்பான சாந்தமான முகம் பொருத்தமாக அமைந்துள்ளது.
மறுபுறம், அன்பு, துடுக்குத்தனம், பொறுமை எனக் கதாநாயகி அனிதாவாக ப்ரீத்தி அஸ்ரானி மிக நேர்த்தியாகப் பொருந்திப் போகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சிறுமி லிதன்யா. முன்பாதியில் தன் குறும்புத்தனத்தால் ரசிக்க வைக்கும் அவர், பிற்பாதியில் உணர்ச்சிகரமான காட்சிகளில் முன்னணி நடிகர்களையே விஞ்சும் அளவிற்குத் தன் நடிப்பால் கவர்கிறார்.
இரண்டாம் பாதியில் தனது துணுக்குகளால் அரங்கைக் கலகலப்பாக்குகிறார் முருகானந்தம்.
உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு ஹரிப்ரியா வலுசேர்க்க, அருவி மதன், பகவதி பெருமாள், ஜென்சன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக, ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு நீலகிரியின் இயற்கை எழிலை அழகாகப் படம்பிடித்து, முதல் பாதியின் நிதானமான நகர்விற்குத் துணை நிற்கிறது.
ஆனால், சில காட்சிகளில் காணப்படும் நேர்த்தியின்மை திரைக்கதைக்கு வேகத்தடையாக அமைந்துள்ளன.
இசையமைப்பிலும் விஜய் ஆண்டனி சற்று ஏமாற்றம் தருகிறார். ‘நீதான் என் கண்ணாடி’, ‘அப்பாவ போல’ ஆகிய பாடல்கள் கதையின் ஆன்மாவை உணர்த்தினாலும், பின்னணி இசை உணர்ச்சிகரமான காட்சிகளுக்குப் போதிய அழுத்தத்தைத் தரவில்லை.
திரைக்கதையின் நகர்வைப் பொறுத்தவரை, அப்பா – மகள் பாசம், சூர்யாவின் மர்மம், அனிதாவின் காதல் என முதல் பாதி முழுவதுமே எந்தவித ஏற்ற இறக்கமும் இன்றி ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பது சற்றுச் சோர்வைத் தருகிறது.
ஏற்கனவே பல படங்களில் பார்த்த தந்தை பாசம் தொடர்பான காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதாலும், வலு இல்லாத காட்சியமைப்புகளாலும் முதல் பாதி மெதுவாக நகர்கிறது.
ஆனால், இடைவேளையின்போது வரும் திருப்பங்கள் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
பிற்பாதியில் சூர்யாவின் கடந்த காலப் பின்னணி, உறவுச் சிக்கல்கள், மருத்துவ ரீதியான சவால்கள், சட்டப் போராட்டம் எனக் கதை பல கிளைகளாக விரிந்து விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் சுவாரசியத்தைத் தந்தாலும், அவை அனைத்தும் அவசர கதியில் நகர்த்தப்படுவதால், முக்கியமான தருணங்களில் ஏற்பட வேண்டிய உணர்வுப் பிணைப்பு முழுமையடையாமல் போகிறது.
இறுதிக்காட்சி மனதை நெகிழ வைத்தாலும், அதில் பழைய பாணி காட்சிகளும், எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட நீதிமன்ற விவாதங்களும் இடம் பெற்றிருப்பது நெருடலை ஏற்படுத்துகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவச் சவால்களையும் உணர்வுப் போராட்டத்தையும் இணைத்துப் பேச நினைத்த இயக்குநரின் எண்ணம் பாராட்டுக்குரியது.
ஆனால், அந்த அழுத்தமான கதைக்கருவை இன்னும் ஆழமான திரைமொழியில் சொல்லத் தவறியதால், ‘அப்பா குட்டி’ முழுமையான நிறைவைத் தராமல் ஒரு சராசரி அனுபவமாகவே முடிகிறது.






