
ஜேகே அறக்கட்டளை சார்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள்!
கும்பகோணத்தைச் சேர்ந்த ஜேகே என்கிற ஜே.கிருஷ்ணசாமி, தனது அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘காஸ்ட்லி மாப்பிள்ளை’, ‘மாண்புமிகு மாமியார்’, ‘மகாராணி செங்கமலம்’, ‘க்ரீன் சிக்னல்’, ‘செல்லம்மா’, ‘மங்கள அட்சதை’, ‘கேள்வியின் நாயகனே’, ‘என் பெயர் ரங்கநாயகி’, ‘மாங்கல்யம்’, ‘ஆடுகிறான் கண்ணன்’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘செல்லமடி நீ எனக்கு’, ‘திருப்பாவை’, ‘அனுபல்லவி’, ‘வெள்ளைத் தாமரை’, ‘தேவதை’ போன்ற பதினாறு தொடர்களை தயாரித்தவர். அந்த தொடர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகின.
இன்று முன்னணி இயக்குனராக விளங்கும் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் சத்யா உட்பட ஏராளமான கலைஞர்களை தமிழ்திரை உலகிற்கும், சின்னத்திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜேகே, பல கலைஞர்கள் ஏற்றம்பெற காரணமாக இருந்தவர்.
கொரோனா தொற்று காரணமாக சென்ற ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி ஜே.கே. காலமானார். அவரது நினைவாக ‘ஜே.கே. அறக்கட்டளை’ என்கிற அமைப்பை அவரிடம் பணிபுரிந்த சில கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கினர்.
அந்த அறக்கட்டளையின் சார்பில் நேற்று ஜேகேயின் படத்தை திறந்து வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர், சின்னைத்திரை உலகில் கஷ்டப்படும் நலிந்த நிலையில் உள்ள கலைஞர்கள் கண்ணாயிரம், பெரியசாமி, ராஜகணேஷ், பீட்டர் பாபியா, ஹரிணி ஆகிய ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு உதவிகள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பத்ரி, சித்திரைச்செல்வன், பிரியன், தனுஷ், அருள்ராஜன், ஜி.பாலன், நடிகர்கள் அழகு, சாய்ராம், நடிகை தேவி பிரியா, இசையமைப்பாளர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டு உதவித்தொகையை வழங்கினார்கள்.
விழாவுக்கு வந்த அனைவரையும் இயக்குநர் சித்திரைச்செல்வன் வரவேற்றார். முடிவில் இயக்குநர் பத்ரி நன்றி கூறினார்.






