
தாய் நிலம்: விமர்சனம்
ஈழத்து அகதிகளின் பெருமூச்சையும், தந்தை-மகள் பாசத்தின் ஆழத்தையும் உலகிற்குச் சொல்லும் ‘தாய்நிலம்’ படைப்பு, சர்வதேசத் திரையுலகின் கரங்களைத் தட்டி எழுப்பியுள்ளது.
போர் என்னும் கோர முகம் தந்த வடுக்களையும், ராமேஸ்வரக் கடற்கரையில் அவர்கள் படும் இன்னல்களையும் கண்முன்னே நிறுத்துகிறது இப்படம்.
இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன், ரத்தமும் சதையுமான வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, சென்சாரின் ‘யூ’ முத்திரையுடன் தந்தை-மகள் உறவின் மென்மையை மையமாக வைத்து மனிதநேயத்தை அழுத்தமாக விதைத்துள்ளார். அறிமுக இயக்குநர் என்ற எந்தத் தடுமாற்றமும் இன்றி காட்சிகளை நகர்த்திய விதம் அற்புதம்.
திரைக்களத்தில் சேதுராமனாக மிரட்டியிருக்கும் டாக்டர் அமர் ராமச்சந்திரன், இழந்த மண்ணின் ஏக்கம் மற்றும் மகளின் எதிர்காலம் குறித்த பயம் ஆகியவற்றைத் தனது பார்வையினாலே கடத்தி அனைவரையும் வியக்க வைக்கிறார்.
சிறுமி குருதஷினா தனது இயல்பான நடிப்பால் நம் கண்களைக் குளமாக்குகிறார்.
மேலும், நேகா அமர், நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன் உள்ளிட்டோரின் எதார்த்தமான பங்களிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
ஆட்டோ கண்ணாடியில் முகம் பார்க்கும் விதம், வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட நொடித் தவிப்பு, பனை மரங்களின் ஊடே தந்தை-மகள் நடந்து செல்லும் சோகக் காட்சிகள் என ஒவ்வொன்றும் மனதை விட்டு அகலாது.
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவத்தின் கேமரா ராமேஸ்வரக் கடற்கரையின் அழகையும், அகதி முகாம்களின் இறுக்கமான வலிகளையும் துல்லியமாகப் பதிவிட்டுத் தனித்துவமான ஆன்மாவைத் தந்துள்ளது.
இவற்றுடன், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஔசேப்பச்சனின் பின்னணி இசையும், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் எழுதிய பாடல்களும் (‘வாடா என் செல்லக்குட்டி’, ‘தலைவாரி பூச்சூடி’, ‘ஆகாயம் மேலே’) நேசத்தையும் ஏக்கத்தையும் மாறி மாறி நம்முள் கடத்தித் தாலாட்டுகின்றன.
மொத்தத்தில், பல்வேறு விருதுகளைக் குவித்து வரும் இப்படம், சாதாரண அகதிகளின் கதை மட்டுமல்லாமல், நல்ல சினிமாக்களைத் தேடித் தேடி ரசிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்துத் தீர வேண்டிய உன்னதக் காவியமாகும்!





